எம்.எல்.ஏ அருள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்: பாமக வழக்கறிஞர் பாலு புகார்!
ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் ஜி.கே. மணி மற்றும் அருள் சட்ட ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

Published : November 14, 2025 at 10:35 AM IST
சென்னை: பாமக எம்.எல்.ஏ அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள். இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். கடந்த 4 ஆம் தேதி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக நிர்வாகி ஒருவரின் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் இடத்தில் வாகனம் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்சனை பெரும் சர்ச்சையானது. அந்த இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட மோதலில் அன்புமணி ஆதரவாளர்களுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் எதிராக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஒரு தரப்பினரான பாமக ஆதரவாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பிறகு பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் மீது நாங்கள் நான்கு புகார்கள் கொடுத்துள்ளோம். ஆனால் எங்களை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் ஜி.கே. மணி மற்றும் அருள் சட்ட ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
| இதையும் படிங்க: கை இல்லாத சட்டை அணிந்து ஊராட்சி மன்ற தலைவர் 'நூதன' போராட்டம்! |
அருள் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட எங்கள் ஆதரவாளர்களை குண்டர் சட்டத்தில் போட 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என தகவல் உள்ளது . இதை காவல் துறை முறையாக விசாரிக்க வேண்டும். காவல்துறை விசாரணையில் பாரபட்சம் நடந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும், பாமகவின் 99 சதவீதம் உறுப்பினர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர். அருள் காவல் துறை பாதுகாப்பை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எனவே, சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நியமித்து வழக்குகளை நியாயமாக விசாரிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்வோம்” என கூறினார்.

