ETV Bharat / state

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது; திமுகவை அகற்றுவதே லட்சியம் என இபிஎஸ் - அன்புமணி பேட்டி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்திருப்பதால் வட தமிழகத்தில் அக்கூட்டணிக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி ராமதாஸ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 10:27 AM IST

|

Updated : January 7, 2026 at 11:03 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி சந்தித்த சில நிமிடங்களிலேயே இந்த கூட்டணி உருவானது.

தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரை, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என அதே கூட்டணி நீடித்து வருகிறது. புதிதாக சில கட்சிகளும் அடுத்த சில மாதங்களில் திமுக கூட்டணியில் இணையலாம் என தெரிகிறது.

ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை காங்கிரஸ் தற்போது கையில் எடுத்திருந்தாலும், திமுக கூட்டணியில் பெரிதாக சலசலப்பு ஏற்படவில்லை. அதே சமயத்தில், அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, பாஜகவை தவிர சொல்லும்படியாக வேறு எந்த கட்சியும் இதுவரை இணையவில்லை. விஜய் தலைமையிலான தவெகவை தங்கள் கூட்டணியில் இழுக்க பாஜகவும், அதிமுகவும் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தவெக இதனை ஏற்கவில்லை.

இபிஎஸ் - அன்புமணி சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)

ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், செங்கோட்டையன் வெளியேறியதால், அக்கட்சிக்கு தெற்கிலும், கொங்கு மண்டலத்திலும் பெரிய அளவில் வாக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வட தமிழகத்தில் செல்வாக்குமிக்க பாமகவை எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. எனினும், அன்புமணி தரப்பு - ராமதாஸ் தரப்பு என பாமக பிரிந்து கிடப்பதால், இருதரப்பையும் ஒன்றுசேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அது பலனளிக்கவில்லை.

இதையும் படிங்க: திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி மீது தாக்குதல்: தலைமறைவாக இருந்த இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் உடனிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தும் அன்புமணி
எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தும் அன்புமணி (ETV Bharat Tamil Nadu)

அரை மணிநேரம் நீடித்த இந்த ஆலோசனைக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாஸும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்திருக்கிறது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக ஆட்சியை அகற்றும் ஒரே லட்சியத்துடன் தேர்தலை நாங்கள் சந்தித்து, பெரும்பாலான தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்போம்.

அதிமுக - பாமக - பாஜக கூட்டணியில் உள்ள அனைவரும் தேனீக்களை போல சுறுசுறுப்பாக பணியாற்றுவோம். தொகுதி பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம். அதனை விரைவில் அறிவிப்போம். அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி" எனக் கூறினார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பதை, உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான தருணமாகவே பார்க்கிறேன். வலுவான கூட்டணியாக நாங்கள் உருவாகியிருக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், 'நன்றி' எனக் கூறிவிட்டு அன்புமணி காரில் புறப்பட்டார். அமித் ஷா தமிழகம் வந்த ஓரிரு தினங்களில், அதிமுக - பாமக கூட்டணி உருவாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

Last Updated : January 7, 2026 at 11:03 AM IST