அதிமுகவுடன் பாமக கூட்டணி ஏன்? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அசத்தல் விளக்கம்
தமிழகத்தில் சுமார் 40 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published : January 9, 2026 at 1:48 PM IST
செங்கல்பட்டு: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவுடன் - பாமக கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவுடன் - பாமக கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை திமுகவினரே பேசத் தொடங்கிவிட்டனர். மக்கள் நம்பிக்கையுடன் மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பளித்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கையை திமுக சிதைத்துவிட்டது. தேர்தல் சமயத்தில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், இதுவரை வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாதாந்திர மின் கட்டண முறை கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சுமார் 40 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள் இருக்கும் அவலநிலை நீடிக்கிறது. இளைஞர்களின் கனவுகளைப் பற்றி பேசும் அரசு, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது.
| இதையும் படிங்க: தீபாவளி ஆஃபர் போல 'ஆட்சியில் பங்கு ஆஃபர்' கொடுக்கிறார் விஜய் - திருமாவளவன் விமர்சனம் |
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. தெலங்கானா, கர்நாடகா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதனை நடத்த தயங்குவது ஏன்? தேர்தல் பணிக்காக ஒரு மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தும் அரசால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,"இனிவரும் தேர்தல்களில் பட்டியலின மக்கள், வன்னியர்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் என பூர்வகுடி மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்துவிட்ட இந்த ஆட்சியின் காலம் முடிந்துவிட்டது. அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள் வெறும் அறிவிப்பாக உள்ளது. முறையான அரசாணை வரும் வரை அவற்றை நம்ப வேண்டாம்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

