மதுரையில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

Published : March 1, 2026 at 6:32 PM IST
மதுரை: இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சென்றுவிட்டு திரும்பிய பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இங்கு நடைபெறுகிற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், இன்று (மார்ச் 1 ஆம் தேதி) காலையில் புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட துவக்க விழாவில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3:00 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.18.28 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள காரைக்குடி ரயில் நிலையம், ரூ.12.58 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள மணப்பாறை ரயில் நிலையம், ரூ.9.86 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள சோழவந்தான் ரயில் நிலையம், ரூ.8.84 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும் தமிழ்நாடு - கேரளாவை இணைக்கும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்த திட்டங்கள் உட்பட ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம். கடந்த 15 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. அந்த வகையில் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களால் இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன் அடிப்படை கட்டுமானங்கள் உருவாகும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆதிச்சநல்லூர் உலக கலாச்சார மையமாக மாற்றப்படும். புலிகட் ஏரி, பொதிகை மலையை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களை ஏற்படுத்தி அங்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். வளமான வரலாறு மற்றும் மரபுக்குச் சொந்தமான மாநிலம் தமிழ்நாடு. புனிதமான மதுரை மண்ணுக்கு வந்ததை மிகப்பெரிய கௌரவமாக பார்க்கிறேன்.
2047ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியரும் ஒரு வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வளர்ச்சியடைந்த தமிழ்நாடு என்பதே நமது கூட்டு இலக்கு. உள்ளடக்கிய வளர்ச்சியையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் செயல்படுத்துவதில் மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அரசு விழாவை முடித்த கையோடு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

