ஜன.28-இல் பிரதமர் மோடி தமிழகம் வருகை? மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

Published : January 9, 2026 at 4:36 PM IST
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக இயங்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெற இருக்கும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பலமான கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன.
இதற்காக தேசியக் கட்சியான பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் அதன் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவரை தொடர்ந்து, கன்னியாகுமரி அருகில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக சார்பில் இந்த மாநாடு நடைபெற்றாலும், இதில் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளார்கள் என்று கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
| இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண் அடுப்பு, பானை - கோரிக்கைக்கு செவிசாய்க்க தமிழக அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் |
தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இந்த மாநாடு அமைய உள்ளதால், தேமுதிக மற்றும் மற்ற கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரும்பட்சத்தில், தேமுதிக உள்பட மற்ற கட்சிகளின் தலைவர்களும் இந்த மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

