ETV Bharat / state

நாளை மறுநாள் கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! பாதுகாப்பு அம்சங்கள் முதல் போக்குவரத்து மாற்றம் வரை!

பிரதமர் வருகையை முன்னிட்டு நாளை மறுநாள் (நவ.19) பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 17, 2025 at 7:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கோயம்புத்தூர் வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு வரும் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி புதன்கிழமை மதியம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம் (ETV Bharat Tamil Nadu)

விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த கூடாது

மேலும், கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கோவை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

அதே நேரத்தில் முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்த தடையும் இல்லை. செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை பயணிகள் தங்களது வாகனங்களை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

கோவை மாநகர சாலை
கோவை மாநகர சாலை (ETV Bharat Tamil Nadu)

போக்குவரத்தில் மாற்றம்

அதே போல், கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் வருகையை முன்னிட்டு 19 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் விமான நிலையம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது. அதே போல், 19 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விமான நிலையத்திற்குள் வாகனங்கள் மற்றும் டாக்சிகள் செல்ல தடை செய்யப்படுகிறது. விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12 மணிக்கு முன்னதாக வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்! ஜிகே வாசன் எம்பி பேச்சு!

மேலும், அன்று பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை ஜி.டி.நாயுடு மேம்பாலம் மூடப்படும். வாகன ஓட்டுநர்கள் அதற்கு ஏற்றபடி பாதையை தேர்வு செய்து கொள்ளவும். அதே போல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளர்கள் கொடிசியா வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.