ஆன்மிக மகோத்ஸவம் 2026: ஆரோவில்லில் மார்ச் 1 -ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
'ஸ்ரீ அரவிந்தரின் ஐந்து கனவுசுளை நனவாக்குதல்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ஆரோவில் சர்வதேச நகரில் ஆன்மிக மகோத்ஸவம் மார்ச் 1-ம் தேதி துவங்குகிறது.

Published : February 25, 2026 at 11:19 AM IST
விழுப்புரம்: ஆரோவில் சர்வதேச நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்- 2026-ஐ பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
மார்ச் 1 -ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். அதனை தொடர்ந்து அவர், ஆரோவில் சர்வதேச நகரில் நடைபெறும் 2-ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவம் 2026-ஐ தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 'பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2-ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவம்-2026 ஆரோவில் சர்வதேச நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகோத்ஸவத்தை மார்ச் 1-ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்.
ஸ்ரீ அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் வழிகாட்டுதலின்படி ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய கலாசார அமைச்சகம் ஆகியவை இணைந்து இவ்விழாவை முன்னெடுக்கவுள்ளது.
மனிதகுலத்துக்கான ஸ்ரீஅரவிந்தரின் 5 கனவுகளை நனவாக்குவது என்ற லட்சியத்துடன் செயல்படும் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல், ஆன்மிக மற்றும் அறிவுஜீவித் தலைவர்கள் அடங்கிய இந்த உயர்நிலைக் குழு உறுப்பினர்களை இந்நிகழ்வு ஒருங்கிணைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியை தலைவராகக் கொண்ட உயர்நிலைக் குழுவில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு), அமித்ஷா (உள்துறை), நிர்மலா சீதாராமன் (நிதி), எஸ்.ஜெய் சங்கர் (வெளியுறவு), தர்மேந்திர பிரதான் (கல்வி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம்?
ஆன்மிக மற்றும் கலாசாரப் பாதுகாவலர்களான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி தேவி, சத்குரு ஜக்கி வாசுதேவ், எம்.மும்தாஜ் அலி, சையத்னா முபதால் சைபுதீன், சுவாமி சுவீரானந்தா, சுவாமி தேஜோ மயானந்தா ஆகியோரும் இக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன், சிறந்த அறிஞர் மற்றும் தொலைநோக்குச் சிந்தனையாளர்களான டாக்டர் அலோக் பாண்டே டேவிட் ஃபிராவ்லி, ஆனந்த ரெட்டி, லலித் வர்மா, அமிதா மெஹ்ரா, விஸ்வஜித் கங்குலி, சம்பதானந்த மிஸ்ரா, கிரண் வியாஸ், சுவாமி பிரம்மதேவ், டாக்டர் பிஜயினி மொஹாபத்ரா, டாக்டர் பலேந்து வைஷ்ணவ், ரங்கசாமி லட்சுமிநா ராயண காஷ்யப், ஆரோவில் அறக்கட்டளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர். என். ரவி, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி மற்றும் பிற மாநில முதல்வர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், உயர்நிலைக் குழுவின் உறுப்பினருமான ஜெயந்தி எஸ்.ரவி மகோத்ஸவ பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
'ஸ்ரீ அரவிந்தரின் ஐந்து கனவுசுளை நனவாக்குதல்' என்ற கருப்பொருளில் மகோத்ஸவத்தில் உயர்நிலை அமர்வுகள் தியானங்கள் மற்றும் கலாசார உரையாடல்கள் நடைபெறும்.
உலகுக்கு ஒரு ஆன்மிக ஒளியாக இந்தியாவை மாற்றும் பிரதமரின் கனவுக்கு இந்த சங்கமம் ஒரு சான்றாக அமை யும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் உலக மக்கள் அனைவரும் பங்கேற்கலாம்' என்று ஆரோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

