ETV Bharat / state

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 33,137 பேர் எழுதினர்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கண்காணிக்கவும், காப்பி அடிப்பதை தவிர்க்கவும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,517 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வெழுதும் மாணவிகள்
தேர்வெழுதிய மாணவிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 5:56 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவள்ளூர்: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் 33,137 மாணவ, மாணவிகள் எழுதியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8,27,475 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். ஆனால், முதல் நாளான இன்று 9,919 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 117 மையங்களில் 14,119 மாணவர்களும், 15,512 மாணவிகளும் என மொத்தம் 29,631 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கூறுகையில். “திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பார்வை மாற்றுத்திறனாளி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 16 மாணவர்கள் தேர்வு எழுதுவதுடன், திருநாவுக்கரசு என்ற மாணவர் தேர்வை கணினி மூலமாக எழுதுகிறார்.

மேலும், 271 ஆசிரியர்கள், பார்வை மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் சொல்வதை எழுதுவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியர் மாணவர்களில் 929 மாணவர்களும், 436 மாணவிகளும் என மொத்தம் 1,365 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வுகள் 18 மையங்களில் 1,110 மாணவர்களும், 1,029 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். ஆக மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் 33,137 மாணவர்கள் இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வினை எழுதுகின்றனர்.

மாணவிகள் தேர்வுக்கு முன்னர் மும்முரமாகப் படித்து கொண்டிருக்கும் காட்சி
மாணவிகள் தேர்வுக்கு முன்னர் மும்முரமாகப் படித்து கொண்டிருக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: “அதிமுக - என்டிஏ கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்பதே தெரியாமல் உள்ளார்கள்” - விளாசிய மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வை கண்காணிக்கவும், காப்பி அடிப்பதை தவிர்க்கவும் 117 முதன்மை கண்காணிப்பாளர்கள், 117 துறை கண்காணிப்பாளர்கள், 12 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 250 பறக்கும் படையினர், 1750 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 271 சொல்வதை எழுதுபவர்கள் என 2,517 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கூறினார்.

இந்நிலையில், தேர்வு முடிந்து வந்த மாணவர்கள் தமிழ் பாட தேர்வின் கேள்விகள் மிகவும் சுலபமாக இருந்ததாகவும், அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் அளித்துள்ளதாகவும், நிச்சயம் அதிக மதிப்பெண்கள் வரும் எனவும் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.