சென்னையில் 11 குளிர்சாதன வசதி கொண்ட நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க திட்டம்
முதற்கட்டமாக அண்ணா சாலை, மயிலாப்பூர், டி.எம்.எஸ், வடபழனி, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் குளிர்சாதன பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Published : September 1, 2026 at 7:11 PM IST
சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய 11 குளிரூட்டும் வசதி கொண்ட பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில், தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டும் வசதிக் கொண்ட 11 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை, SIMS மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, குருநானக் கல்லூரி, ரோகினி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் தங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் இந்த குளிர்சாதனம் வசதிக் கொண்ட பேருந்து நிறுத்தங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டமைத்து தர இருக்கின்றன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "மக்கள் பயன்பெறும் வகையில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பேருந்து நிறுத்தங்களும் ஒரே மாதிரி இருக்கும். அந்தந்த தனியார் அமைப்புகளே அவற்றை பராமரிக்கும் பணிகளையும் பார்த்துக்கொள்ளும்" என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறுகையில், "பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது. இது ஒரு புதிய முயற்சி. குறிப்பாக 56 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 7 தனியார் நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்துள்ளன. இதன் மூலம் 11 இடங்களில் நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக அண்ணா சாலை, மயிலாப்பூர், டி.எம்.எஸ், வடபழனி, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன" என தெரிவித்தார்.
| இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம், சர்க்கரை விலை - காபி, பண்டம் கூட போட முடியவில்லை; இல்லத்தரசிகள் கண்ணீர் |
குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் சிறப்புகள்
குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை (Air Conditioned Waiting Hall)
கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV Camera)
வைஃபை வசதிகள் (Wi-fi facility)
சாய்வு தளப் பாதை (Accessible ramp, preferably integrated with the footpath)
பேருந்து வழித்தடத் தகவல்கள் (Bus Route information)
மின்விளக்கு வசதி (Lighting)
வெயில் தாங்கும் கூரை அமைப்பு (Puff panel roofing)
உறுதியான பாதுகாப்பான கண்ணாடி (Toughened / laminated Safety glass)
USB சார்ஜிங் வசதிகள் (USB charging points)

