ETV Bharat / state

புலி தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம்: ஊட்டியில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்

ஊட்டி அருகே சின்ன காடிமந்து பகுதியில் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புலி தாக்குதல் எதிரொலியாக ஊட்டியில் மூடப்பட்ட பைன் ஃபாரஸ்ட் சுற்றுலாத தலம்
புலி தாக்குதல் எதிரொலியாக ஊட்டியில் மூடப்பட்ட பைன் ஃபாரஸ்ட் சுற்றுலாத தலம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 12:40 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நீலகிரி: ஊட்டி அருகே புலி தாக்கி பழங்குடியினர் ஒருவர் உயிரிழந்ததால் பைன் ஃபாரஸ்ட், ட்ரீபார்க் ஆகிய சுற்றுலாத் தலங்கள் இன்று மூடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி 65 சதவீதம் வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் வறண்டு வருகின்றன.

இதனால் தண்ணீருக்காகவும், இரைத தேடியும் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. இவ்வாறு வரும் வன விலங்குகள், பல நேரங்களில் கால்நடைகளையும், சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி விடுகின்றன. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்பு ஊட்டி அருகே உள்ள சின்ன காடிமந்து கிராமத்தில் தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தார் குட்டன் (57) என்பவரை புலி தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. புலி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சின்ன காடிமந்து கிராமம் உள்ளிட்ட பல பழங்குடியினர் கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. புலி மீண்டும் தாக்கக்கூடும் என்பதால் மாலை வேளைக்கு பிறகு மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழலில், பழங்குடியினர் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களான பைன் ஃபாரஸ்ட் (pine forest), ட்ரீபார்க் (tree park) ஆகிய இடங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத்துறை இன்று (பிப்.26) மூடியுள்ளது.

மேலும், இப்பகுதியில் புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால், விரைவில் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் அதை விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில், உள்ளூர் மக்கள் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், புலி நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களுக்கு வனத்துறை அறிவுரை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் வெயில்: நீலகிரி வனப் பகுதியில் குடிநீர்த் தொட்டிகளை நிரப்பும் பணிகள் தீவிரம்

இந்நிலையில், இதுபோல வன விலங்குகளால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க, வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பழங்குடி இன மக்களுக்கு வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்