ETV Bharat / state

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கை எஸ்.ஐ.டி.க்கு மாற்றக் கோரி மனு தாக்கல்

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தனிப்படை குழு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 9:38 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு மாற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக குழந்தையின் தாயிடம் காவல்துறை முதலில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏன் தவறான தகவலை காவல்துறை தெரிவித்துள்ளது என தெரியவில்லை.

சிறுமி காணாமல் போன நேரத்தில் காவல்துறை என்ன விசாரணை செய்தது என்பதை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடித்து குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அண்ணா நகர் 10 வயது சிறுமி பலியல் வன்கொடுமை வழக்கு, நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு தினம்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமனம்

ரகசியமாக விசாரிக்க வேண்டிய கோவை சிறுமி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனைத்தும் செய்திகளில் வெளியாகியுள்ளது. அதனால், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும்.
வழக்கின் விசாரணை முடியும் வரை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும். வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை சூலூரை சேர்ந்த 10 வயது சிறுமி மே 21-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, பக்கத்து வீட்டில் வசித்துவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

நீண்ட நேரமாக சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இரவு 10 மணியளவில் புகார் அளித்தனர். அப்போது, சிறுமியை கடத்தி சென்றதாக கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கும், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து தேடியுள்ளார்.

இந்நிலையில், மே 22ம் தேதி சிறுமியின் உடல் அருகில் உள்ள கண்ணம்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தனிப்படை குழு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் என்பவரையும் கைது செய்தது.