ETV Bharat / state

முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி

வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்ற சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி கொடுங்கையூரைச் சேர்ந்த எம். ராஜ்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 2, 2026 at 5:17 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: வருமானத்தை மறைத்ததாக வருமானவரித் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் வீட்டில், கடந்த 2015 ஆம் ஆண்டு சோதனை நடத்திய வருமான வரித்துறை, 'புலி' படத்திற்கு அவர் பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்தும் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, முதலமைச்சர் விஜய்-க்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்ற சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் கொடுங்கையூரைச் சேர்ந்த எம். ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: பரபரப்பாகும் அரசியல் களம்: டெல்லியில் பாஜக தேசிய தலைவருடன் அண்ணாமலை சந்திப்பு

இதுகுறித்த மனுவில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முகாந்திரம் உள்ளதா? என்பதை ஆராய்வதற்காக, ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.