உடல்நலம் பாதிக்கப்பட்டது போல் நாடகம்; விமான நிலையத்தில் சிக்கிய ரூ. 3 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உடல் நலம் பாதிக்கப்பட்டது போல் போலி சான்றிதழ் தயாரித்ததும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பணத்திற்காக குருவியாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

Published : August 31, 2026 at 10:32 AM IST
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அனைத்து சர்வதேச விமான பயணிகளையும் கண்காணித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் வழியாக, நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில் 48 வயது மதிக்கத்தக்க இந்திய ஆண் பயணி ஒருவர் வீல் சேரில் அமர்ந்தவாறு வந்துள்ளார். மேலும் அவர் குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு, தனது உடைமைகளை கன்வேயரில் வந்து எடுத்துக் கொண்டு சுங்க சோதனைக்கு செல்லாமல் தன்னிடம் எந்த சோதனைப்பொருட்களும் இல்லை எனக் கூறிவிட்டு வெளியேற முயன்றுள்ளார்.
ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் அவரது உடல் நலம் குறித்து விசாரித்த போது, அவர் வீல்சேரில் அமர்ந்தவாறு அழைத்து செல்லப்படும் அளவிற்கு அவருக்கு எந்த பிரச்சனையும் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் மேலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்த நிலையில், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது அவருடைய உடமைக்குள் ஆறு பார்சல்களில் போதைப்பொருள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் அந்தப் பார்சல்களை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்த போது, அதில் ஹைட்ரோபோனிக் கஞ்சா எனப்படும் உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் மொத்தம் மூன்று கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி என தெரிவிக்கப்பட்டது.
| இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் ரத்து எதிரொலி; சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டமா? |
இதனையடுத்து ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்திக் கொண்டு வந்த அந்த ஆண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர் இந்த போதைப்பொருளை வெளியே கொண்டு செல்வதற்காக உடல் நலம் பாதித்து வீல் சேரில் வந்ததும், அதற்கு போலியான சான்றிதழ் தயார் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பணத்திற்காக குருவியாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் சென்னையில் யாரிடம் கஞ்சாவை கொடுக்க வந்தார்? இவரது பின்னணியில் செயல்படும் போதை கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

