குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஆட்சியரிடம் புகார் அளித்த ஓரிவயல் கிராம மக்கள்
கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் பெற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Published : July 7, 2026 at 9:41 PM IST
ராமநாதபுரம்: முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி போட்டோ, வீடியோவுடன் ஓரிவயல் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஓரிவயல் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் ஒரு நீர் தேக்க தொட்டி ஒன்றும் உள்ளது. அதன் மூலம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் பெற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஓரிவயல் கிராமத்திற்கு சொந்தமான ஒரு பொது கிணற்றில் இருந்து 500 குடும்பங்களும் தண்ணீர எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த கிணற்றிலும் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து, பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்து மாசுபட்டு உள்ளதால், கிணற்றில் இருக்கும் சுத்தமில்லாத தண்ணீரை எடுத்து ஓடிவயல் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீர் வசதி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்படுவதால் ஓரிவயல் கிராமத்திற்கு உடனடியாக போதுமான குடிநீர் வசதி செய்து தருமாறு கிராம மக்கள் வீடியோ மற்றும் போட்டோவுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

