ETV Bharat / state

நிலுவையில் உள்ள தீவிரவாத வழக்குகள்: சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவு

25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்களில் 2 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க போதிய நிதியினை வழங்கவும் பரிந்துரை செய்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம் - கோப்புப்படம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 10:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள 39 வழக்குகளை விரைந்து விசாரிக்க கூடுதலாக இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளின் உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் ஆலயம் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மொஹமத் தல்ஹா என்பவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மொஹமத் தல்ஹாவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவாக நடைபெறவில்லை. அதனால், தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் டி.சண்முகம் மற்றும் ஜி. சித்தி ராமுலு ஆகியோர், "மனுதாரர், பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் எனவும், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஒரு குறிப்பட்ட மக்களை படுகொலை செய்ய திட்டம் திட்டியுள்ளனர். இது தொடர்பாக, பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கோவை கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்த ப்பட்ட வாகனத்தை மனுதாரர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

மேலும், மனுதாரரின் தந்தை மற்றும் மாமா, தடை செய்யப்பட்ட அல் உமா அமைப்பை உருவாக்கியவர்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர் என்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும்" என தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், "மனுதாரருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது" என உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் இதுபோன்ற தீவிரவாத செயல்களுக்கு எதிராக தொடரப்பட்ட 39 வழக்குகள் நீண்ட நாட்களாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: கருணை அடிப்படையில் வேலை என்பது அரசியல் சாசன நியமன திட்டம் அல்ல - நீதிமன்றம் அதிரடி

என்.ஐ.ஏ மற்றும் பிற தீவிரவாத வழக்குகளை துரிதமாக விசாரிக்க கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தின் தேவை குறித்த கேள்வியை எழுப்பினர். இதுதொடர்பாக, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 10க்கும் மேற்பட்ட தீவிரவாத வழக்குகள் நிலையில் உள்ள மாநிலங்களில் ஒரு சிறப்பு நீதிமன்றமும், 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்களில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க போதிய நிதியினை வழங்கவும் பரிந்துரை செய்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதேபோன்ற பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் செய்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அதுகுறித்து விளக்கம் பெற மத்திய மற்றும் மாநில அரசுகளின் உள்துறை செயலாளர்களை இந்த வழக்கில் தாமாக இணைத்துடன், அவர்களை பதிலளிக்க கூறி வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.