'மூச்சு விட முடியல..' பழுது ஏற்பட்டு 5 மணி நேரம் நின்ற விமானம்; மீண்டும் சிக்கலில் இண்டிகோ ஏர்லைன்ஸ்
இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் கவனத்திற்கு எதுவும் வரவில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Published : February 25, 2026 at 7:17 PM IST
சென்னை: சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஏசி கோளாறால் சுமார் 5 மணி நேரமாக பயணிகளுடன் நின்றிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை (பிப்.24) 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சுமார் 198 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், விமானி விமானத்தை ஓடுபாதையில் இயக்கத் தொடங்கியுள்ளார். அப்போது விமானத்திற்குள் திடீரென ஏசி வேலை செய்யாமல் வெப்பம் அதிகமாகி உள்ளது.
இதனால் பயணிகள் விமானத்தில் இருந்த பணிப்பெண்களிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பணிப்பெண்கள் விமானியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் விமானி விமானத்தை இயக்காமல் ஓடுபாதையில் நிறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த விமானி, பழுதான ஏசி சரி செய்யப்பட்ட பிறகு விமானம் இயக்கப்படும் என எழுதி வைத்துவிட்டு விமானத்திலிருந்து இறங்கி சென்று உள்ளார்.
இதையடுத்து விமான பொறியாளர் குழுவினர் விமானத்திற்குள் ஏற்பட்ட ஏர் கிராஃப்ட் டெம்பரேச்சர் பிரச்சினையை சீர் செய்தனர். ஆனால் விமானத்தை இயக்குவதற்கு விமானி வர காலதாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் விமானத்தில் ஏசி இயங்குவது நின்று உள்ளது. இதனால் மீண்டும் விமானத்திற்குள் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் விமானத்திற்குள் மூச்சு விட முடியவில்லை எனக்கூறி பயணிகள் கூச்சலிட்டு வெளியேற முயன்று உள்ளனர்.

ஆனால், விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கான 'ஏரோ பிரிட்ஜ்' இணைக்காததால் பயணிகள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். இதனால், விமானத்தில் இருந்த பணி பெண்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து விமானத்திற்குள் மீண்டும் ஏசி சரி செய்யப்பட்டது. இருப்பினும், விமானத்தை இயக்குவதற்கு விமானி வராததால் பயணிகள் சுமார் 5 மணி நேரம் விமானத்திற்குள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பயணிகள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஒரு வழியாக சுமார் 5 மணி நேரம் கழித்து விமானி வந்து உள்ளார். இதையடுத்து அந்த விமானம் சுமார் 12 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றது.
விமானத்தில் ஏசி பிரச்சினை ஒருபக்கம், விமானி வர காலதாமதம் என சுமார் 5 மணி நேரமாக பயணிகள் விமானத்திற்குள் முடங்கிய சம்பவத்தால் இண்டிகோ ஏர்லைன்ஸ் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும், இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பயணிகள், ''விமான பாதுகாப்பு சட்டப்படி, விமானத்தை இயக்காமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணிகளை அமர வைத்து இருப்பது சட்டத்துக்கு முரணானது. ஆனால், இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளை சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அமர வைத்துள்ளனர். இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, '' இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் கவனத்திற்கு எதுவும் வரவில்லை'' என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.

