முடிந்தது கோடை விடுமுறை: சென்னை திரும்பும் பயணிகளால் விமானக் கட்டணம் அதிகரிப்பு
மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்நாட்டு விமான சேவைக்கான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

Published : June 1, 2026 at 10:35 AM IST
சென்னை: கோடை விடுமுறை முடிவடையவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளால் சென்னை விமான சேவைகளுக்கான கட்டணங்களை விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வரும் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றிருந்த சென்னைவாசிகள் நேற்று மாலை முதல் கார்கள், பேருந்துகள், விமானங்கள் மூலம் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.
இதனால் சென்னை செல்லும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே சமயம், சென்னை வழியாக செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், சேலம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

சென்னைக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்களை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியபோதும், டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
| இதையும் படிங்க: ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் வேலூர் மாவட்டம் மேம்படுத்தப்படும் - புதிய ஆட்சியர் லீமா அலெக்ஸ் உறுதி |
விமான கட்டணங்கள் எவ்வளவு உயர்வு?
சாதாரண நாட்களில் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான கட்டணம் ரூ. 5,800 ஆக இருந்த நிலையில், இதே வழித்தடத்தில் இன்று (ஜூன் 01) பயணம் மேற்கொள்வதற்கு ரூ. 17,303 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 6,623 ஆக இருந்த விமான பயணக் கட்டணம், இன்று இதே வழித்தடத்தில் பயணம் மேற்கொள்வதற்கு ரூ. 17,272 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.14,404 ஆகவும், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.16,504 ஆகவும், சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 8,105 ஆகவும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 14,624 ஆகவும், கொச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 11,055 ஆகவும் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் விமான நிலையங்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் விமான கட்டண உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

