தென்காசி - திருநெல்வேலி டூ சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்படுவது எப்போது? தென்மாவட்ட மக்களின் நிறைவேறாத 14 ஆண்டு கால கோரிக்கை
திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடமானது தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளத்தையும் இணைக்கக்கூடிய மிக முக்கியமான ரயில் வழித்தடம் ஆகும்.

Published : October 8, 2026 at 8:01 AM IST
|Updated : October 8, 2026 at 8:09 AM IST
-By இரா. மணிகண்டன்
திருநெல்வேலி: பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் 14 ஆண்டு கால இந்த கோரிக்கை இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில், தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும் வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
திருநெல்வேலி-தென்காசி ரயில் வழித்தடமானது தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவையும் இணைக்கக்கூடிய மிக முக்கியமான ரயில் வழித்தடம் ஆகும்.
மீட்டர் கேஜ் டூ பிராட் கேஜ்
திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை 30.78 கிமீ தூரம் கடந்த 1902 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்றும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து செங்கோட்டை வரையிலான 50.34 கிமீ தூரத்துக்கு 1903 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 அன்றும் மீட்டர் கேஜ் வழித்தடம் தொடங்கப்பட்டது.
அதன் பின்னர் கேரளம் மாநிலம் கொல்லம் - புனலூர், புனலூர் - செங்கோட்டை மீட்டர் கேஜ் வழிதடங்கள் முறையே 1904 ஜூன் 01, 1904 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட்டன. பின்னர், கொல்லம் - திருநெல்வேலி - திருசெந்தூர் மற்றும் தென்காசி – விருதுநகர் ஆகிய 357 கிமீ தூரம் கொண்ட வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றிட 1997-98ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு அப்போதைய திட்ட மதிப்பீடு 712 கோடிகள் ஆகும். இந்த பெரிய ரயில்வே திட்ட பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2007 டிசம்பர் 31 அன்று அகல ரயில் பாதை பணிகளுக்காக திருநெல்வேலி - தென்காசி மீட்டர் கேஜ் பாதை மூடப்பட்டு பணிகள் நடைபெற்றன. பின்னர் 2012 செப்டம்பர் 21 அன்று திருநெல்வேலி-தென்காசி வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயக்கம் தொடங்கியது.
சென்னைக்கு இயக்கப்படாத தினசரி ரயில்
பொதுவாக இதுபோன்று புதிய வழித்தடங்கள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வழித்தடம் திறக்கப்படும் போது பெரும்பாலும் சென்னைக்கு தினசரி ரயில்கள் அறிவித்து இயக்கப்படும். குறிப்பாக தென்காசி - விருதுநகர் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டபோது செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது செங்கோட்டை - விருதுநகர் பகுதி மக்களுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் மிகவும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

ஆனால், திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்படும்போது தினசரி சேவையில் நான்கு ஜோடி பயணிகள் ரயில்கள் மட்டுமே திருநெல்வேலி - செங்கோட்டை இடையே அறிவித்து இயக்கப்பட்டது. சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்படவில்லை.
மேலும், ஆரம்ப காலத்தில் 1904ல் இருந்து 1927 வரை சுமார் 25 ஆண்டுகள் வரை திருநெல்வேலி - தென்காசி வழித்தடத்தில் தான் மிகவும் பிரபலமான கொல்லம் மெயில் இயங்கி வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த திருநெல்வேலி - செங்கோட்டை மீட்டர் கேஜ் வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து இரண்டு தினசரி ரயில்கள் சென்னைக்கு இயங்கி வந்த நிலையில் தற்போது சென்னைக்கு ஒரு ரயில் கூட இல்லாத நிலை உள்ளது.
14 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை
தற்போது இவ்வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு, செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயில் 2023ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. எனவே, தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென 14 ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாகும். 1904ம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது தென்காசி, பாவூர்சத்திரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக சென்னைக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
அகல பாதையாக மாற்றப்பட்ட பின்னர் அந்த ரயில்கள் நிறுத்தப்பட்டு இந்த வழித்தடத்தில் நான்கு ஜோடி பயணிகள் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் இருந்து சென்னை, தாம்பரத்திற்கு வாரம் மூன்று நாட்கள் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
வரும் 11ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அப்போது தென்காசி - திருநெல்வேலி வழித்தடம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு செல்லும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி அந்த சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தால் இந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் சென்னைக்கு தினசரி ரயில் இல்லாத ஒரே வழித்தடம் தென்காசி- திருநெல்வேலி வழித்தடம்தான். தற்போது தீபாவளி, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் தினசரி ரயில் இயக்கினால் தென்மாவட்ட மக்களுக்கு பெரும் பயனளிக்கும். இதன் மூலம் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பயன்பெறும்.

இந்த வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி ரயில் இல்லாததால் பாவூர்சத்திரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரூ.400 முதல் ரூ. 500 வரை ஆட்டோவுக்கு செலவு செய்து உடைமைகளுடன் தென்காசிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ சென்று ரயில் ஏற வேண்டி உள்ளது.
இதனால்தான் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல், செங்கோட்டை-தாம்பரம் மும்முறை ரயில் தற்போது 16 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்படுகிறது. தென்காசி, திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் நீட்டிக்கப்படாமல் இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியவில்லை.
| இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத் திட்டம் வராததால் ரியல் எஸ்டேட் துறைக்கு இழப்பு - கிரெடாய் தலைவர் வேதனை |
எனவே, பிளாட்பாரம் நீட்டிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கூடுதலாக இந்த ரயிலில் ஆறு பெட்டிகள் இணைக்கும்போது மேலும் 500 பயணிகள் பயனடைய முடியும். இதேபோல் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தென்காசி, திருநெல்வேலியில் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.
அதேபோல், மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது திருநெல்வேலியில் இருந்து கேரளம் மாநிலம், கொல்லத்திற்கு மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த ரயில்களையும் தற்போது திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வரை மட்டுமே இயக்குகிறார்கள். எனவே, இரு மாநில வணிக தேவையைக் கருத்தில் கொண்டு மீண்டும் திருநெல்வேலி-கொல்லத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்" என அவர் கூறினார்.

