ETV Bharat / state

திருவண்ணாமலையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதால் ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 11:02 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் தலைமையின் கீழ் கட்சியின் மறுசீரமைப்பு நிர்வாகிகள் நியமனம், மாவட்டச் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை- செங்கம் சாலையில் உள்ள அத்தியந்தல் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் அருள் பெத்தய்யா, மேலிடப் பார்வையாளரும், திருவாரூர் முன்னாள் மாவட்டத் தலைவருமான துரைவேலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அதேபோல், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. அப்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சால்வை அணிவிப்பதற்காக மேடைக்கு சென்றபோது, அங்கிருந்த நிர்வாகிகளிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மண்டபத்தில் இருந்து வெளியேறினர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: செப்டம்பர் 1க்கு பிறகு திரையரங்குகளில் படம் வெளியாகாதா? தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்குமரன் கூறியது என்ன?