அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்புகள் என்ன? கோவை வந்த நாடாளுமன்ற நிலைக்குழு
கோவையில் ஜவுளி மற்றும் தொழில் துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறியவுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் தெரிவித்தார்.

Published : January 8, 2026 at 4:10 PM IST
|Updated : January 8, 2026 at 4:15 PM IST
கோயம்புத்தூர்: அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் முனைவோர்களுடன் நாடாளுமன்ற நிலைக்குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் முடிவுகள் உலகளவிலான வர்த்தக சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவதாக சீனா, இந்தியா போன்ற நாடுகள் மீது குற்றஞ்சாட்டிய டிரம்ப், அந்த நாடுகளுக்கு அதிகப்படியான வரிகளை விதித்தார். அந்த வகையில், முதலில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்து 25% வரியை 50% ஆக உயர்த்தினார்.
ஆனால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் இந்தியாவை சேர்ந்த வணிகர்களும், உற்பத்தியாளர்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவு குறித்து ஆய்வு செய்யவும் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் தலைமையிலான 16 எம்.பிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காணவும், வரிச் சிக்கலை தீர்க்க இந்தியா-அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ளவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் நாடாளுமன்ற நிலைக்குழு தமிழ்நாடு வருகை தந்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் தலைமையிலான நாடாளுமன்ற குழுவினர் ஜன.6 முதல் 8 வரை விசாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தொழில்துறையினரை நேரில் சந்தித்து கருத்துக்கள் மற்றும் பாதிப்புகளை கேட்டு வருகின்றனர். அந்த வகையில், விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் சந்திப்புகளை முடித்து விட்டு, இந்த குழு இன்று (ஜன.8) கோயம்புத்தூர் வருகை தந்துள்ளது.
| இதையும் படிங்க: உலக மகா திருடர்கள் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை - ஆர்.எஸ். பாரதி விமர்சனம் |
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழு ஒருங்கிணைப்பாளர் டோலா சென், “நாடாளுமன்ற நிலைக்குழுவில் 16 எம்.பிக்கள் இருக்கின்றோம். அமெரிக்கா விதித்துள்ள வரியின் காரணமாக தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், டாலரின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளோம்.
அந்த வகையில், நேற்று சென்னையில் ஆட்டோமோட்டிவ் தொழில், தோல் தொழில் துறை ஆகியவற்றில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தோம். இந்நிலையில், இன்று கோவையில் உள்ள ஜவுளி துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள உள்ளோம். இது தவிர தொழில் துறையில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன? என்பது குறித்தும் கேட்டறிய இருக்கின்றோம். தொடர்ந்து, வங்கி அதிகாரிகளுடனும், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளோம்" எனறு தெரிவித்தார்.

