ETV Bharat / state

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி - அதிகாரி அளித்த விளக்கம் என்ன?

சமீபத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் பள்ளியிலே தங்கி, சமைப்பது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், மாணவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

ரோஸ்மியாபுரம் அரசுப் பள்ளி வளாகத்தில் கிடக்கும் மதுபாட்டில்கள்
அரசுப் பள்ளி வளாகத்தில் கிடக்கும் மதுபாட்டில்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 10:06 AM IST

3 Min Read
Choose ETV Bharat

By இரா.மணிகண்டன்

திருநெல்வேலி: பல ஆண்டுகளாக சுற்றுச் சுவர் இல்லாததால், அரசு பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கும் சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், சில இடங்களில் அரசு பள்ளிகள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் காணப்படுகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே அரசு உயர்நிலைப் பள்ளி சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வேதனையான சம்பவம் அரங்கேறி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக, மாவட்டத்தின் எல்லையில் பணகுடி அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரோஸ்மியாபுரம் என்ற கிராமத்தில் தான் குறிப்பிட்ட அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 116 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

தலைமை ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 8 பேர் இங்கு பணிபுரிகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளிக்கு, சுமார் ஒரு ஏக்கர் வரை இடம் உள்ளது. பணகுடியில் இருந்து களக்காடு செல்லும் பிரதான சாலை ஓரம் அமைந்துள்ள இந்த பள்ளியானது, முன் பக்கச் சுற்றுச்சுவர் எதுவும் இல்லாமல் திறந்த வெளி மைதானம் போல் காட்சியளிக்கிறது.

ரோஸ்மியாபுரம் அரசு பள்ளி பிரச்னை குறித்து பொதுமக்கள் கருத்து (ETV Bharat Tamil Nadu)

கடந்த 2015-2016 ஆம் நிதி ஆண்டில், பள்ளியின் பின் பகுதியில் மட்டும் பெயரளவுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், முன் பகுதி திறந்த நிலையில் இருப்பதால், ஆடு மாடுகளை பள்ளி வளாகத்தில் மேய்க்க விடுவதாகவும், சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஊர் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சமீபத்தில் இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு ஒப்பந்த நிறுவனம் முறையான இட வசதி ஏற்பாடு செய்து கொடுக்காததால், தொழிலாளர்கள் அனைவரும் இந்த பள்ளியின் வளாகத்தில் குடும்பத்தோடு தங்கியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் நலன் கேள்விக்குறி

இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பால்சாமி நம்மிடம் பேசினார். அப்போது அவர், “இந்தப் பள்ளி 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கிறது. எங்கள் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்கு அருகில் உள்ள பணகுடிக்கு செல்ல வேண்டும்.

இந்தப் பள்ளியில் சமீப காலமாக விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. பள்ளியில் சுற்று சுவர் இல்லை. அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. அங்கிருந்து ஏராளமான காட்டு விலங்குகள் ஊருக்குள் அடிக்கடி நுழைகின்றன. எனவே சுற்றுசூவர் இல்லாததால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

சமீபத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கேயே சமைப்பது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், மாணவர்கள் முகம் சுளிக்கும் நிலை இருந்தது. எனவே தொடர்ச்சியாக போராடி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினோம். தற்போது வரை சுற்றுச் சுவர் கட்டப்படாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. அதாவது சிலர் பள்ளி வாளகத்திற்குள் இரவு நேரம் வந்து மது அருந்து விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். சுற்றுச் சுவர் இருந்தால் யாரும் உள்ளே வர மாட்டார்கள். எனவே அரசு உடனடியாக இங்கு சுற்று சுவர் கட்டி தர வேண்டும்,” என்று கூறினார்.

பாதுகாப்பற்ற சூழலில் மாணவர்கள்

மேலும், இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் முறையாக அங்கு செய்து கொடுக்கவில்லை என்பதை நேரடியாக பள்ளிக்கு சென்ற நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

இது குறித்து பிரேம்குமார் என்பவர் கூறும் போது, “இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. பின்பகுதியில் இருந்த சுற்று சுவரும் சமீபத்தில் இடிந்து விழுந்து விட்டது. சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், மைதானம் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படுகிறது,” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமாரை தொடர்பு கொண்டோம். அவர், “ஏற்கனவே ரோஸ்மியாபுரம் பள்ளி பிரச்சினை, எங்கள் கவனத்திற்கு வந்தது. ஆனால், போதிய நிதி இல்லாததால் உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட முடியவில்லை. அரசிடம் சிறப்பு நிதி பெற்று தான் சுவர் கட்ட வேண்டும்.

இதையும் படிங்க: தலைவர்கள் பரப்புரைக்காக ‘ரோல்ஸ் ராய்ஸ்’ தரத்தில் உருவாகும் வாகனங்கள் - 'பிரமிப்பு' ஏற்படுத்தும் அலங்காரம்

இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். நிதி கிடைத்தவுடன் விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்படும். அதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது,” என்று கூறினார்.