ETV Bharat / state

தைவானில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி இளைஞர்; ரூ.4 லட்சம் மோசடி? – மகனை மீட்டுத்தர பெற்றோர் கண்ணீர் கோரிக்கை

தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு விசாவிற்கு பதிலாக சுற்றுலா விசாவில் தைவான் நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை
பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 6, 2026 at 9:41 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: தைவான் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தேன்பொத்தை பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் தனது மகன் மணிகண்டனை தைவான் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார்.

அவர்கள், தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி, ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக முத்துராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, அவரது மகனை தைவான் போலீசார் கைது செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், ‘எனது மகன் மணிகண்டன் (22) ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ளார். கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தைவான் நாட்டில் தக்காளி பேக்கிங் வேலைக்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், தங்கும் வசதி மற்றும் உணவை நிறுவனமே வழங்கும் என்றும் விளம்பரம் செய்திருந்தது.

அதனை நம்பிய எனது மகன் வேலைக்காக அணுகியபோது, அங்கு பணிபுரியும் சக்தி என்ற பெண், வேலை கிடைக்க ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும்' என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நான், குடும்ப நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ.4 லட்சத்தை, 08.12.2025 அன்று நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். பின்னர், 14.02.2026 அன்று அவர்கள் எனது மகனை தைவானுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியை காட்டுப் பகுதியில் சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்

ஆனால், அவர்கள் கூறியபடி ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளமும் வழங்கப்படவில்லை. தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் எனது மகன் மணிகண்டன் கடும் சிரமத்திலும், பசியாலும் தவித்து வருவதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு விசாவிற்கு பதிலாக சுற்றுலா (Tourist Visa) விசாவில் மணிகண்டன் அனுப்பப்பட்டதாகவும், அதன் காரணமாக தைவானில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தற்போது எனது மகன் எந்த காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது கூட எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை' என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தங்களது மகனை உடனடியாக இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ள நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தருவதோடு, இதேபோல் பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி, நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தைவான் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.