ETV Bharat / state

மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை என புகார் - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்

பள்ளி நிர்வாகம் இதுவரையிலும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட  பெற்றோர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 8:05 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள துரிஞ்சுகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல் கடந்த 2 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சமீபகாலமாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததால் மாணவிகள் பயத்துடன் பள்ளிக்கு வருவதை தவிர்த்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆசிரியர் மாணிக்கவேல் தொல்லை அதிகரித்ததை அடுத்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று திடீரென பள்ளியை முற்றுகையிட்டு குறிப்பிட்ட ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "இத்தகைய கொடூரச் செயல்களைச் செய்த ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல" என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.

தகவலறிந்த ஆசிரியர் மாணிக்கவேல் இன்று பள்ளிக்கு வரவில்லை. இது பெற்றோர்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து "ஆசிரியர் வராமல் கலைந்து செல்ல மாட்டோம். அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

தகவலறிந்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விரைந்து வந்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து விசாரிக்காமல் தங்களிடமே விசாரணை மேற்கொள்வது நியாயம் இல்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆசிரியரின் தொல்லை தற்போது தான் தெரிந்தது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பாகவும் நடந்திருக்கலாம். முழு விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமிகள் மது அருந்தும் வீடியோ விவகாரம்: அரசியல் காரணத்திற்காக வழக்குப் பதிவதா? - நீதிமன்றம் காட்டம்

செங்கம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியில் பெரும்பாலும் ஏழை விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி அச்சம் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் இதுவரையிலும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உண்மையெனில் அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.