ETV Bharat / state

Yearender 2025: காடுகளையும், யானைகளையும் பாதுகாக்க முனைப்பு காட்டிய நீதிமன்றம்

வனங்களை பாதுகாப்பது, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, யானை வழித்தடங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 31, 2025 at 2:05 PM IST

5 Min Read
Choose ETV Bharat

-By க.சசிக்குமார்

சென்னை: மக்கள் நலனுக்காக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்தாலும், அது முழுமையாக அமல்படுத்தப்பட்டதா? என்றால் கேள்விக்குறிதான். அதே போல, ஒரு சில திட்டங்களை தவிர மற்றவைகளை நடைமுறைப்படுத்துவதில், அரசு ஏனோ ஆர்வம் காட்டுவது இல்லை. குறிப்பாக, வனங்களை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், சுற்றுலா வளர்ச்சி, வருமானம் காரணமாக சில சலுகைகளை சுற்றுலா பயணிகளுக்கு அரசு வழங்குகிறது.

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை விதித்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில், அரசும் அதிகாரிகளும் கடுமை காட்டவில்லை என கூறப்படுகிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இருந்தாலும், மனித தவறுகளால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், அரசும் அதிகாரிகள் அமல்படுத்த தவறியதை நீதிமன்றங்கள் தங்கள் உத்தரவுகள் மூலமாக செயல்படுத்துகிறது. இது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

கருவேல மரங்கள்
கருவேல மரங்கள் (ETV Bharat Tamil Nadu)

காவு வாங்கும் கருவேல மரங்கள்

கரீபியன் தீவுகள், மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்கா தீவுகளை தாயகமாகக் கொண்ட சீமைக்கருவேல மரங்கள், ஆங்கிலேயர்கள் மூலமாக இந்தியாவிற்கு நுழைந்தவை எனக் கூறப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis juliflora). தற்போது, இந்த மரங்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளன. அள்ள அளஅள குறையாதது போன்று, அழிக்க அழிக்க வளரும் கருவேல மரங்கள், எந்த சூழலிலும் எளிதில் தகவமைத்துக் கொண்டு, வளரும் தன்மை கொண்டது. இது நிலத்தடி நீரை மட்டுமின்றி, வளி மண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகளையும் உறிஞ்சும் தன்மை கொண்டது.

இதனால், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி, பல்வேறு தரப்பினர் 2015-ல் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக, நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், முதற்கட்டமாக கருவேல மரங்களை அகற்ற 37 மாவட்டங்களில் 738 குழுக்கள் அமைக்கப்பட்டன.

2024 - 2025 ஜனவரி வரை கருவேல மரங்களை அகற்றுவதற்காக மட்டுமே ரூ.2 கோடியே 37 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 517 கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

யானை வழித்தடங்கள்
யானை வழித்தடங்கள் (ETV Bharat Tamil Nadu)

மீட்கப்படுமா யானைகள் வழித்தடம்?

தந்தங்கள் மீதான மோகத்தால், யானைகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றன. இதனால், யானைகளின் எண்ணிக்கையையும் கணிசமாகக் குறைத்து வருவதால், அவற்றின் பாதுகாப்பில் நீதிமன்றம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், அவை ஊருக்குள் புகுந்து மனித - மிருக மோதலும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், யானைகளை தடுக்க சுவர் அமைக்க வேண்டியதில்லை, யானைக்கான இடத்தை யானைக்கே வழங்கினால் ஏன் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பதை அறிந்த நீதிமன்றம், ‘தமிழகத்தில் உள்ள 42 யானை வழித்தடங்களில் 18 தடங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற வழித்தடங்களையும் விரைவில் அறிவிக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் நீதிமன்றமே தன்னிச்சையாக வழித்தடங்களை அறிவித்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்’ என எச்சரிக்கை விடுத்தது.

அதிநவீன கேமராக்களால் தடுக்கப்பட்ட யானை உயிரிழப்பு

தமிழக - கேரள வனப்பகுதியில் உள்ள தண்டவாளங்களைக் கடக்கும் போது, ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு, தமிழ்நாடு, கேரளா வனத் துறையுடன் இணைந்து கோவை, பாலக்காடு வனப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், யானைகள் தண்டவாளங்களைக் கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த 11 இடங்களிலும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு, யானைகள் சுலபமாக செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.

யானைகள் (கோப்புப்படம்)
யானைகள் (கோப்புப்படம்) (Getty Image)

மேலும், போத்தனூர்-மதுக்கரை பகுதி தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறிய சென்சார் கேபிள்கள் (IDS system) பொருத்தப்பட்டது. அதற்காக 12 உயர் கோபுரங்களும், அதில் ஒவ்வொரு கோபுரத்திலும் 2 அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் ரயில் தண்டவாளங்களிலிருந்து 150 மீட்டர் தொலைவில் யானைகள் வருவது தெரிந்தால், உடனடியாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயில் ஓட்டுநருக்கு தகவல்கள் அனுப்பப்படும். இதனால், யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது குறைந்துள்ளது. கடந்த 2022 அக்டோபர் - 2025 வரையான 27 மாதங்களில் பாலக்காடு - போத்தனூர் ரயில் பாதையில் ஒரு யானைக் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பில் சம்பாதித்த விடுதிகளுக்கு பூட்டு

நீலகிரி மாவட்டம் சோலூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்த தமிழக அரசு, கடந்த 1991-ல் ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1.92 லட்சம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்து உத்தரவிட்டது. இதனால், சோலூர் பஞ்சாயத்தை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிர்த்து தனியார் விடுதிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனியார் விடுதிகளின் குறைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

நீதிபதி வெங்கட்ராமன் குழு, யானைகள் வழித்தடத்தில் 1991 ஆம் ஆண்டுக்கு பின், நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என 2024 ஆம் ஆண்டு அறிவித்ததுடன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் விடுதிகளை 15 நாட்களில் அகற்றவில்லை என்றால், மாவட்ட நிர்வாகம் கட்டடங்களை இடித்து நிலத்தை கையகப்படுத்தலாம் என்று அறிவித்தது.

இந்த உத்தரவு பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து பணம் சம்பாதித்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அதனால், சிறப்பு குழுவின் உத்தரவுக்கு எதிராக சுமார் 480 ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதை தீவிரமாக விசாரித்த உயர் நீதிமன்றம், சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும். 1991 ஆம் ஆண்டுக்கு பின் வாங்கப்பட்ட நிலத்தின் விற்பனை செல்லாது. வனப் பகுதியில் வணிக நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்பதால், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கவும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

பாட்டிலுக்கு பத்து ரூபாய்

இயற்கையை சீரழிக்கும் விதமாக, இன்பச் சுற்றுலா என்ற பெயரில் வனத்துக்குள் சென்று மதுபானங்களை அருந்துவது, ஆங்காங்கே பாட்டில்களை உடைப்பது, பிளாஸ்டிக் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுவதால், அதை சாப்பிடும் வனவிலங்குகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், குப்பைகள் குறையவில்லை. இந்நிலையில் தான், சுற்றுலா தலங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்ற அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

மேலும், வனப்பகுதியில் மது பாட்டில்கள் பயன்பாட்டை தடுக்க, அதனை திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2025 ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.

சுற்றுலா தலத்தில் இபாஸ்-களை பரிசோதிக்கும் காட்சி
சுற்றுலா தலத்தில் இபாஸ்-கள் சோதனை (ETV Bharat Tamil Nadu)

இ-பாஸ் நடைமுறை

வார விடுமுறை, பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையின் போது, மக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து செல்வது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளும் அதிகரித்தது.

இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதால், நீதிமன்றம் தாமாக முன்வந்து சில கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

அதேபோல, கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக, இ-பாஸ் நடைமுறை கொண்டுவந்து, அது கடுமையாக்கப்பட்டது. இதனால், ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல முடியாத சுற்றுலா பயணிகள், வால்பாறையை நோக்கிப் படையெடுத்தனர். ஆனால், வால்பாறையிலும் கடந்த நவ.1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: தேர்தலுக்கு முந்தைய பொங்கல் - பரிசு தொகுப்புடன் ரொக்கம் எவ்வளவு? எகிறும் எதிர்பார்ப்பு

மீண்டும் மஞ்சள் பை

நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வண்ணம், தமிழ்நாட்டில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்தது. இருந்தாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதனால், நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்த நீதிமன்றம், உணவுப் பொருட்களை இலை, காகிதம் போன்ற மக்கும் பொருட்களில் அடைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய உத்தரவிட்டது. மேலும், சுற்றுலா தளங்களில் "மீண்டும் மஞ்சள் பை" திட்டத்தை விரிவு படுத்தவும் அரசுக்கு அறிவுரை வழங்கியது. இப்படி கட்டுப்படுத்த முடியாத சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நீதிமன்றத்தின் பங்கு முக்கியம் என்பதை தவிர்க்க முடியாது.