மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக போராட்டம் - ஓசூரில் 100-க்கும் மேற்பட்டோர் கைது
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது பொய் பிரச்சாரங்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published : September 2, 2026 at 7:15 PM IST
கிருஷ்ணகிரி: மேகதாது அணைக் கட்டும் திட்டத்திற்கு எதிராக ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஓசூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (செப்டம்பர் 2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது, காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டக் கூடாது. காவிரி ஆற்றில் பெங்களூரு நகரின் கழிவுநீர் கலப்பதைத் உடனடியாகத் தடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை சுட்டுக்கொன்ற அம்மாநில வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பும் இனவெறியர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்திற்கு பிறகு, காவல்துறையின் தடையை மீறி மேகதாது பகுதியை நோக்கி நடைப்பயணமாகச் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| இதையும் படிங்க: பழங்குடியின மாணவிகளை அரசு பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட விவகாரம்: நடத்துநர் டிஸ்மிஸ் |
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் கானகபுரா அருகே காவிரி மற்றும் அர்க்காவதி நதிகள் இணையும் பகுதியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்த மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீர் முழுமையாகக் கிடைக்காமல் தடைபடும் என்றும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு மாறாக கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

