மீனம்பாக்கம் டு தேனாம்பேட்டை... மெட்ரோவில் 9 நிமிடத்தில் வந்த இதயம்
ரயில் எந்த நிலையங்களிலும் நிற்காமல், ஏழு நிலையங்களை 9 நிமிடத்தில் கடந்து, ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது.

Published : February 27, 2026 at 8:36 PM IST
சென்னை: மதுரையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை மருத்துவக்குழுவினர் பத்திரமாக சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு வந்து அப்பல்லோ மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பாலு (17) என்பவரின் நுரையீரல் மற்றும் இதயம் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்டது. இந்த நிலையில், அந்த உடல் உறுப்புகளை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு வர மருத்துவ குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை, மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்குழுவினர் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கு வந்தனர். அங்கு சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் உதவியுடன் அந்தக் குழுவினர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயிலில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். அந்த ரயில் எந்த நிலையங்களிலும் நிற்காமல், ஏழு நிலையங்களை 9 நிமிடத்தில் கடந்து, ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து, மருத்துவக் குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு நுரையீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (27.2.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை, மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை கொண்டு சென்று உயிர் காக்கும் பொருட்டு துரித போக்குவரத்து உதவியை வழங்கி முக்கிய பங்காற்றியது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்வே (Carriage And Ticket) திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவையை வழங்கியது. சென்னை மெட்ரோ ரயில், திறம்பட்ட நகரப் போக்குவரத்தை மட்டுமின்றி, அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் பங்களித்து பொதுச்சேவைக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: விபத்தில் மூளைசாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை |

