விபத்தில் மூளைசாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
சிறுவன் பாலுவின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் பயன்பெற்றுள்ளனர் என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

Published : February 27, 2026 at 6:32 PM IST
மதுரை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பாலு (17). இவர் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் அண்ணா நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கிய பாலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவசர சிகிச்சைக்காக பள்ளபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையிலும், தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். எனினும், பிப்ரவரி 26ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாலுவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து, அவரது தந்தை முருகனின் ஒப்புதல் பெறப்பட்டு, பாலுவின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு இதயம் மற்றும் நுரையீரல், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு கல்லீரல், திருச்சி அப்போலோ மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. மேலும், கருவிழிகள், தோல் ஆகியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
இதையடுத்து, அவரது உடலுக்கு ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு, உறவினர்களிடம் ஒ்பபடைக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் கூறுகையில், "சிறுவன் பாலுவின் உடல் உறுப்பு தானத்தால் 7 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக, கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் அவரது உடலை ஒப்படைத்துள்ளோம். அவருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறினார்.

