அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றதே தவறு என மனுதாரர் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

Published : August 28, 2026 at 9:56 PM IST
சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக 26,380 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றதே தவறு என குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தல் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதையடுத்து, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

