ETV Bharat / state

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் - வழக்கை திரும்ப பெற ஓபிஎஸ் முடிவு

கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கும் திரும்ப பெறுவதற்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 3:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற முடிவெடுத்துள்ள நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்குகளை திரும்ப பெற திமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் 2022 ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக நிர்வாகி வைரமுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும், புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 2022-ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவிலும், ஜே.சி.டி பிரபாகர் தவெகவிலும் இணைந்துள்ள நிலையில், இந்த உரிமையியல் வழக்குகளை திரும்ப பெற அனுமதி கோரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

அதன் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள், திரும்பப் பெறுவதற்கான வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கடிதங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படாததால் வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை (ஜூன் 04) தள்ளி வைத்துள்ளார்.

இதே போல கட்சி நடவடிக்கைகளில் தலையிடவும், கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கும் திரும்ப பெறுவதற்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளார்.