ETV Bharat / state

வரும் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து, புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார் என ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 3:56 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

வரும் மார்ச் 7 ஆம் தேதி திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

கால்கோள் விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், ”திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையேற்று, பல்வேறு இயக்கங்களில் இருந்து திமுகவில் இணைகின்ற நிகழ்வு வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு நிகழ்வை தொடங்கியுள்ளோம். ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து, புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பட்ட மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை மக்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் 70, 80 சதவீதம் மேல் திமுகவில் இணைகிற நல்ல சூழல் உள்ளது” என்றார்.

அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, திமுகவில் இணைந்து ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டார் ஓபிஎஸ் என அதிமுகவினரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை” என்றார்.

பின்னர் திருமங்கலத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்த கேள்விக்கு, ”எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தாலும் திரு என திருமங்கலம் இயற்கையான பெயர் அமைந்துள்ளது. கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெறும், அதே போல ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் - மதுரையில் பிரதமர் மோடி உறுதி

இந்த நிகழ்வில் தமிழ்நாடு பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.