சட்டப்பேரவை மரபை மாற்றி எழுதிய முதலமைச்சர் விஜய் - ஆச்சரியத்தில் ஆழ்ந்த எம்எல்ஏக்கள்
இன்று காலை முதல் பிற்பகல் வரை சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

Published : August 27, 2026 at 9:10 PM IST
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் இன்று தமது இருக்கையைத் தவிர்த்து அமைச்சர்களுடன் அமர்ந்து பேரவை நிகழ்வுகளைக் கவனித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாள்தோறும் காலை 09.30 மணிக்கு தொடங்குகிறது. நாள்தோறும் சட்டப்பேரவைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனி இருக்கையில் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கவனித்து வருகிறார். அத்துடன், சட்டப்பேரவை விதி எண் 110- ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று (ஆக.27) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதில், நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கைலாஷ் யாத்திரைக்கு சென்ற தமிழ்நாடு பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பது, தற்போது நேபாளத்தில் நிலவும் சூழல் போன்றவைக் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காலை முதல் மதியம் வரை நடந்த அலுவல்களில் முதலமைச்சர் விஜய் பங்கேறவில்லை. பிற்பகல் 03.00 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு நடுவே அமர்ந்து பேரவை நிகழ்வுகளை கவனித்து வந்தார்.
அப்போது, இன்று காலை முதல் பிற்பகல் வரை சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோருடன் கேட்டறிந்தார்.
வரலாற்றில் தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட முதலமைச்சர்கள் யாரும் சட்டப்பேரவையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மாற்றாக வேற எந்த இருக்கையிலும் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை கவனித்தது கிடையாது. அந்த வகையில் வரலாற்றின் முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட மரபை மாற்றி சக அமைச்சர்களுடன் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சக அமைச்சர்களுடன் முதலமைச்சர் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கவனித்ததை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சமூகநீதி துறையின் மானிய கோரிக்கையான இன்று முதலமைச்சர், அனைவரும் சமம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் சட்டப்பேரவையில் சக அமைச்சர்களுடன் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வைக் கவனித்தாரா? என்ற பார்வையும் மேலோங்கி காணப்படுகிறது.

