திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு
தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு அக்கட்சி சார்பில் இதுவரை யாரும் நாடாளுமன்றம் செல்லாத நிலையில், தற்போது முதல் முறையாக தேமுதிக உறுப்பினர் மாநிலங்களவை செல்லவுள்ளார்.

Published : March 3, 2026 at 9:05 PM IST
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இவை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் உள்ளிட்ட ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பேரவைச் செயலகத்தின் இணைச் செயலாளர் தேன்மொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் சமீபத்தில் புதிதாக இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தேமுதிக சார்பில் இந்த ஒப்பந்தத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் சகோதரரும், அக்கட்சியின் பொருளாளருமான எல்.கே.சுதீஷ் கையொப்பமிட்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதிஷ், "திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு நன்றி. மாநிலங்களவை வேட்பாளர் யார் என நாளை காலை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார். அதன்பிறகு வேட்புமனு தாக்கல் செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி, எந்த தொகுதி என்று திமுகவிடம் ஆலோசிக்கப்படும்" என தெரிவித்தார்.
தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு அக்கட்சி சார்பில் இதுவரை யாரும் நாடாளுமன்றம் செல்லாத நிலையில், தற்போது முதல் முறையாக தேமுதிக உறுப்பினர் மாநிலங்களவை செல்லவுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் மார்ச் மாதம்-16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

