தமிழ்நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி நிதியுதவி - பாஜக செயல் தலைவர் நிதின் நபின் பேச்சு
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து இருந்து வருவதாக நித்தின் நபின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published : January 10, 2026 at 9:26 PM IST
கோவை: பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளதாக பாஜக செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
பாஜக தொழில்துறை வல்லுனர் பிரிவு சார்பில் 'Professional Connect 2026' எனும் தொழில்துறையினருக்கான கருத்தரங்கம் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் குறிப்பிட்ட 'உன்னத பாரதம்' என்பதை நோக்கி இந்தியா தற்போது நகர்ந்து வருகிறோம். மோடி தமிழகத்தின் முன்னேற்றதிற்கு அரும்பாடுபட்டு வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. இங்கு பல்வேறு தரப்பு மக்கள், தொழில் வல்லுநர்களை பார்க்க முடிகிறது. GST புரட்சியால் தொழில் வல்லுனர்கள் பயன்பெற்றுள்ளனர்.
கோவை தமிழகத்தில் முன்னேறிய நகரமாக உள்ளது. கோவைக்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் பிரதமர் மோடி. கோவைக்கு டெக்ஸ்டைல் துறையில் பல்வேறு சலுகைகளை மத்திய பாஜக அரசு கொடுத்துள்ளது. 2004-2013 வரை மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. வீடு கட்டும் திட்டத்தில் 90 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. லஞ்சம் இல்லாத அரசை கொடுக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு. அதை பிரதமர் மோடி மத்தியில் செயல்படுத்தி வருகிறார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "திமுக லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்துள்ளது. கொங்கு பகுதி முன்னேற்றத்திற்கான பகுதி, ஆனால் துர்ப்பாக்கியமாக பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. கல்லூரி மாணவிகள் மீது அட்டூழியங்கள் நடைபெறுகிறது. திமுக அரசாங்கம் மண்னை விட்டு அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களின் பேச்சு அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. ஆன்மீகம் மீது கொச்சையாக பேசி வருகிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நம்மை அடித்து வெளியேற்றினார்கள். நம் குரல் அனைத்து இடங்களிலும் ஒலிக்க வேண்டும். காசி தமிழ் சங்கம் மூலம் தமிழை பிரதமர் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் நல்ல அரசாங்கம் அமைய வேண்டும் என சபதம் ஏற்போம், வெற்றிவேல் வீரவேல்.. ஜெய் தமிழ், ஜெய் பாரத்" என தெரிவித்தார்.

