ETV Bharat / state

ஒரு மணி நேரம் மக்கள் பிரச்சனை மீதி நேரம் சண்டை: இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? பிரேமலதா ஆவேசம்

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேசுவதற்கு அவையில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பேரவையில் பிரேமலதா விஜயகாந்த்
பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் (TN ASSEMBLY LIVE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 7:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஒரு மணி நேரம் மக்கள் பிரச்சனை பற்றி பேசுகிறார்கள். மீதி நேரம் சண்டை போடுகிறார்கள். இது சட்டமன்றமா அல்லது சண்டைமன்றமா என்று பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “12 மணியிலிருந்து 2 மணி வரை சட்டப்பேரவையில் சண்டை தான் போகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் எக்ஸாமுக்கு கூட இதுபோன்று படித்திருப்பார்களா என்று தெரியாது.

அனைவரும் முன்கூட்டியே புள்ளிவிவரத்தை தெரிந்து வருகிறார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் ஒரு மணி நேரம் மட்டுமே மக்களை பற்றி பேசுகிறார்கள். மீதி நேரம் சண்டை மட்டுமே போடுகிறார்கள். இதனால் மக்களுக்கும் நாட்டுக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. இது சட்டமன்றமா, சண்டைமன்றமா என்ற கேள்வி வருகிறது. நானும் மிகவும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எழுந்தாலே சண்டைதான் வருகிறது என ஆதவ் அர்ஜுனாவுக்கு நான் தெரிவித்திருக்கிறேன். இவ்வளவு நாள் சட்டபேரவை சுவாரசியமாக இருந்தது. இது மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் சட்டசபை. நமது தனிப்பட்ட கருத்துகளுக்காக சட்டசபையை பயன்படுத்தக்கூடாது. இது மிகவும் தவறானது. சட்டசபையில் மக்களுக்காக மட்டுமே பேச வேண்டும். மானிய கோரிக்கையில் துறை சார்ந்த அமைச்சர்களிடம் பேச வேண்டும். ஆனால் இது நடக்கும் விஷயமாக தெரியவில்லை.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என சபாநாயகரிடம் கேட்டேன். மக்களுக்காகவும், அவர்களது தொகுதிக்காகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும். இது நாளை நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

விருத்தாசலத்தில் மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் அமைத்து தர வேண்டும். நல வாரியம் அமைத்துக் கொடுத்து பொருளாதார ரீதியாக சிறுபான்மையினரை உயர்த்த வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை. எனவே நல வாரியத்தை விருத்தாச்சலத்தில் அமைத்து தர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசிடம் நான் வைக்கும் கோரிக்கை.

மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்த பிறகு அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இதுவரை ஆட்சி செய்தவர்கள், அவர்கள் கடமை நன்றாக தான் செய்துள்ளார்கள். அதனால் தான் நாடு இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது.

மேலும் த.வெ.க. அரசு தற்போது தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் எப்படி நல்லது செய்ய வேண்டும் என்பதை யோசித்துப் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு சண்டை போடுவதால் யாருக்கு என்ன பலன்?. அரசுப் பள்ளி, கல்லூரிகளின் விடுதிகள் தனியாருக்கு நிகராக இருக்க வேண்டும். உங்களது ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை இதில் தான் காண்பிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு சண்டை போடுவது எந்த பிரயோஜனமும் கிடையாது.

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் விருப்பம் - திருமாவளவன் பேட்டி

நாளையிலிருந்து சபையில் ஒரு மாற்றம் வரும் என நினைக்கிறேன். அனைத்து சட்ட மன்ற உறுப்பினருக்கும் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆதவ் எந்திரித்தாலே சண்டை ஆகிறது, அவர் எழுந்தாலே 4 மணி நேரம் சண்டையிலேயே போகிறது. இதுதொடர்பாக சபாநாயகரை தனியாக சந்தித்து முறையிட உள்ளேன்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.