பொங்கலை முன்னிட்டு 3 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம்; பயணிகள் ஷாக்!
ஆம்னி பேருந்து கட்டணம் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.3,500-ம், நாகர்கோவிலுக்கு ரூ.4,200-ம், திருச்சிக்கு ரூ.3,000-ம், கோவைக்கு ரூ.3,000-ம், நெல்லைக்கு ரூ.4,200-ம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Published : January 11, 2026 at 12:28 PM IST
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சென்னையில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். என்னதான் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என இயக்கப்பட்டாலும், சில பயணிகள் ஆம்னி பேருந்துகளை தங்களது விருப்பமாக தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், பொங்கல் சிறப்பு ரயில்கள், பேருந்துகளின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகின்றன.
3 மடங்கு உயர்வு
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தில், பயணிகள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதுபோன்ற சூழலை சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சாதகமாக பயன்படுத்தி, பேருந்து டிக்கெட் விலையை கொள்ளை லாபத்திற்கு விற்கின்றனர். அந்த வகையில், பொங்கலை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல உள்ள ஆம்னி பேருந்துகளின் முன்பதிவு கட்டணம் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
ஆம்னி பேருந்து கட்டண விவரம்
வழக்கமாக, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,400 - ரூ.1,800 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தற்போது குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் ரூ.4,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை - கோவைக்கு வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - மதுரைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 - 1,100 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.3,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல ரூ.900 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படும் நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி ரூ.4,200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை - திருச்சிராப்பள்ளி செல்வதற்கு ரூ.600 முதல் ரூ.900 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு பண்டிகையின் போதும் கட்டண உயர்வு தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்து உரிமையாளர்களை எச்சரித்தாலும், இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆகையால், கட்டண உயர்வு விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
21 ஆயிரம் பேருந்துகள்
2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய (ஜன.10) நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 712 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 2,804 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதில், 1,26,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல, ஜன.1 - ஜன.9 வரை மொத்தம் 5,510 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,47,180 பேர் பயணித்துள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் தேவை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆகையால், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

