ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா பரிமாற்றம்; நீதிபதி அதிர்ச்சி

விஷ்வாவின் பதிலை கேட்டு கோபம் அடைந்த நீதிபதி ஷர்மிளா, நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா கொண்டு வந்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஓமலூர்
ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஓமலூர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 7:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சேலம்: ஓமலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கைதிகள் ஒருவருக்கொருவர் கஞ்சா பொட்டலத்தை பரிமாறிக் கொண்டதை நீதிபதி நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் நவீன் குமார்(27). இவரை கடந்த 2024 ஆம் ஆண்டு பொட்டியபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த விஷ்வா, காமலாபுரம் கலர் காட்டைச் சேர்ந்த சிவநாதன், கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கமலேஷ் உட்பட நான்கு பேர் கத்தியால் வெட்டினர்.

இந்த வழக்கில் விஷ்வா, சிவநாதன், கமலேஷ் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். மேலும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலும் உள்ளன. இந்த நிலையில் ஜாமீன் நீட்டிப்புக்காக இவர்கள் 3 பேரும் ஓமலூர் நீதிமன்றத்திற்கு நேற்று ஆஜராகி இருந்தனர்.

இவர்களது கூட்டாளியான கன்னங்குறிச்சியை சேர்ந்த அஜித் குமார் வேறு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

கஞ்சா பொட்டலம் பறிமாறிக்கொண்ட கைதிகள்
கஞ்சா பொட்டலம் பறிமாறிக்கொண்ட கைதிகள் (ETV Bharat Tamil Nadu)

அப்போது ஓமலூர் நீிதிமன்ற வளாகத்தில் விஷ்வா, சிவநாதன், கமலேஷ் , அஜித் குமார் ஆகிய நான்கு பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விஷ்வா பொட்டலம் ஒன்றை அஜித் குமார் கையில் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்து நீதிபதி சர்மிளா அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய டெஸ்ட் டிரைவ் கார் - ஊழியர் உயிரிழப்பு

அப்போது விஷ்வாவிடம், "அஜித்குமாரிடம் என்ன கொடுத்தீர்கள்?" என்று நீதிபதி கேட்டபோது கஞ்சா பொட்டலம் கொடுத்ததாக விஷ்வா தெரிவித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷ்வாவின் பதிலை கேட்டு கோபம் அடைந்த நீதிபதி ஷர்மிளா, நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா கொண்டு வந்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் சிவநாதன், கமலேஷ், விஷ்வா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதனை தொடர்ந்து மூன்று பேரும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஓமலூர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.