ETV Bharat / state

சுயமாக சிந்தித்துதான் திமுகவில் இணைந்தேன்; அனைவரையும் அரவணைக்கும் போக்கு அதிமுகவில் இல்லை - ஓபிஎஸ் ஓபன் டாக்

மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஸ்டாலினை ‘தளபதி’ என்று குறிப்பிட்டு பேசினார்.

ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
ஓ. பன்னீர்செல்வம் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 11:22 AM IST

2 Min Read
Choose ETV Bharat

- எஸ்.சிவக்குமார்

சென்னை: நான் சுயமாக சிந்தித்துதான் திமுகவில் இணைந்தேன் என்று தெரிவித்துள்ள ஓபிஎஸ், கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும், அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உட்பட பலரும் அவருடன் திமுகவில் இணைந்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், இன்றைக்கு அறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுகவில் தன்னை மகிழ்ச்சியோடு இணைத்திருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு அரசியலில் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிற, அரசியல் பண்பாட்டோடு தளபதி (ஸ்டாலின்) கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்பதை நன்றாக உணர்ந்து திமுகவில் பெருமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்.

அண்ணா அறிவாலயத்தில் ஓபிஎஸ் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக ஆணவபோக்குடன் நடந்துகொள்கிற எடப்பாடி பழனிசாமி, எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாத சூழ்நிலையை அதிமுகவிற்கு உருவாக்கி இருக்கிறார். அம்மாவின் (ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இன்றைக்கு தளபதியின் தலைமையை ஏற்று திமுகவில் இணைத்துக்கொண்டிருக்கின்றனர். நாடே தளபதியை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.

ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்தவேண்டும் என்ற இலக்கணத்தோடு திமுகவை தளபதி வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அதேபோல், கடந்த 5 ஆண்டுகாலம் முதலமைச்சராக பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும் அனைத்து துறைகளிலும் நின்று ஒரு சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்துகொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கு இணையாக வாழ்வை உருவாக்கிட வேண்டும் என்ற நல்லநோக்கோடு தளபதி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.

அதிலும் பெண்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்கள் குடும்பத்தை வழிநடத்திச் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார். சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்துக் கட்சிகளையும் அணுகினாரோ, அதேபோல் சட்டமன்றத்தில் தாய் உள்ளத்தோடு அனைத்து உறுப்பினர்களையும், ஸ்டாலின் அரவணைத்து செல்கிறார். தளபதியை ஆதரிக்கும் மனநிலை எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது," என்றார்.

சர்வாதிகாரி ஈபிஎஸ்

மேலும் அவர் கூறியபோது, "அதிமுகவின் சர்வாதிகாரியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவுப்பாதைக்கு இட்டு சென்று கொண்டிருக்கிறார் என்பதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும், மிகுந்த வருத்தத்தோடு திமுகவில் இணைந்து வருகின்றனர்.

தென்மாவட்டங்களிலிருந்து அதிமுகவில் எந்த தலைவரும் வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி கவனமாக இருந்து, அவர்களை அழிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். கலைஞர் பாசத்தோடு ‘பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்’ என்று என்னை பாராட்டினார்.

திராவிட இயக்கத்தையும் கொள்கையையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பதில் தலைசிறந்த இயக்கமாக திமுக விளங்கி வருகிறது. என்னை பாசத்தோடு அரவணைத்துக் கொண்ட தளபதிக்கு என்னுடைய நன்றி. திமுகவில் இன்று நான் தொண்டனாகத்தான் இணைந்துள்ளேன். திமுக வளர்ச்சிக்கு நான் முழுமையாக பாடுபடுவேன்," என்றார்.

சுயமாக சிந்தித்துதான்...

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சுயமாக சிந்தித்துதான் திமுகவில் இணைந்தேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. திமுகவிற்கு ஒரு ஊறு ஏற்பட்டால் அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தளபதிக்கு உள்ளது. இதனை எண்ணித்தான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்.

நான் திமுகவில் இணைவதற்கு எந்தவித அழுத்தமோ, அச்சுறுத்தலோ, கட்டாயமோ இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தளபதி வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். பொறுமையாக இருந்து எல்லா அம்சங்களையும் சிந்தித்துப் பார்த்துதான் இந்த முடிவை எடுத்தேன். நான் எடுத்த முடிவு தலைசிறந்த முடிவு என்று ஆயிரக்கணக்கானோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்