ETV Bharat / state

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்

ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க இனி வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் அண்மையில் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்
மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் (Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 9:48 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவரும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் இணைய இனி வாய்ப்பில்லை என்று தெரிந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக அரசியலின் இந்த திருப்புமுனை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் காரணமாக அக்கட்சி பல அணிகளாக பிரிந்தது. இருப்பினும் கட்சியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளார்.

மறுபுறம், சசிகலா தனிக்கட்சி தொடங்கப்போவதாக சமீபத்தில் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சி பெயர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்துவிட்டார். இதனால் தனித்து விடப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் மீண்டும் சேர்க்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து அவர் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வந்தார். இருப்பினும் அவர் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை அவ்வபோது சந்தித்து பேசி வந்தார். அத்துடன், "வருகிற தேர்தலிலும் திமுகதான் ஆட்சியமைக்கும்" என்று அண்மையில் ஆருடம் கூறியிருந்தார். இதனால் ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் திமுகவுடன் கைகோர்ப்பார் என்று தமிழக அரசியலில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: தாமதமாகும் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை; கனிமொழி டெல்லிக்கு அவசர பயணம்

அதற்கேற்ப, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ், அங்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தம்மை திமுகவில் இணைத்துக் கொன்டார். முன்னதாக, திமுக மூத்த அமைச்சர் சேகர் பாபுடன் ஒரே காரில் பயணித்து ஓபிஎஸ் அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார்.

ஸ்டாலினை ஆரத்தழுவிய ஓபிஎஸ்
ஸ்டாலினை ஆரத்தழுவிய ஓபிஎஸ் (ETV Bharat Tamil Nadu)

மறைந்த முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்படுபவர் ஓபிஎஸ். அத்துடன் அவர் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திமுகவின் பிரதான அரசியல் எதிரியாக இருந்து வரும் அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவரான ஓபிஎஸ திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

ஓபிஸ்ஸுடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும் இவர்களுடன் அவருடைய ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் இணைந்தனர்.

முதலமைச்சராக இருந்த ஒருவர் இன்னொரு கட்சிக்கு மாறி மற்றொரு தலைமையை ஏற்றுக் கொண்டது தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதம் அளிக்கும் ஓபிஎஸ்
எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதம் அளிக்கும் ஓபிஎஸ் (ETV Bharat Tamil Nadu)

எம்எல்ஏ பதவி ராஜினாமா

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, தமது போடிநாயக்கனூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை (எம்எல்ஏ) ராஜினாமா செய்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை இன்று நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் அளித்தார்.

ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான ஐயப்பனும் தனது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

பதவி கிடையாது

ஓ.பி.எஸ்-க்கு திமுகவில் எந்த கட்சி பதவியும் வழங்கப்படாது என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், அடுத்த சபாநாயகராக, அதிமுகவினர் வணங்கும் இடத்தில் ஓபிஎஸ் அமர வைக்கப்படுவார். சபாநாயகராக இருப்பவர் கட்சியில் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என்பது விதி, ஓ.பி.எஸ்-ன் கோரிக்கையும் இதுதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.