'நாங்க இருக்கோம் மகளே...' பெற்றோரை இழந்த பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முதியோர் இல்லத்தினர்
என்னை மகளாகவும், சகோதரியாகவும், பேத்தியாகவும் நினைத்து அனைவரும் ஆசீர்வதித்தது என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாள் என கர்ப்பிணி பெண் கண்ணீர் ததும்ப நன்றி கூறினார்.

Published : March 2, 2026 at 9:26 PM IST
பெரம்பலூர்: கரோனாவில் பெற்றோரை இழந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, முதியோர் இல்லத்தில் இருக்கும் நபர்கள் வளைகாப்பு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. கரோனா பெருந்தொற்றின் போது தனது பெற்றோரை இழந்து தவித்து வந்த இவர், சகோதரர்களின் முயற்சியால் பெரம்பலூரை சேர்ந்த நந்த கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மகிழ்ச்சியுடன் தனது புதிய வாழ்க்கையை தொடங்கிய பிரியங்கா தற்போது கர்ப்பமாக உள்ளார். ஆனால், கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கும் வளைகாப்பு விழா, பெற்றோர் இல்லாத காரணத்தால் அவருக்கு கிடைக்காமல் போகுமோ என்ற ஏக்கம் மனதை வதைத்தது.
அதற்கு ஏற்றாற்போல், சமீபத்தில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், பிரியங்காவின் ஏக்கத்தை உணர்ந்த நல்ல உள்ளங்கள், உறவுகள் இல்லாத இடத்தில் உறவாக மாறினர்.
அதாவது, ‘உதிரம் நண்பர்கள்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் நா.ஜெயராமன் தலைமையில், பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள 'அன்பு முதியோர் இல்லம்' இன்று பிரியங்காவின் தாய் வீடாக மாறியுள்ளது.
அந்த முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரும் தனது சொந்த பேத்தியை ஆசீர்வதிப்பது போன்று, வளைகாப்பு நடத்தி ஆசீர்வதித்தனர். அந்த தருணம் யாருமே இல்லை என்ற பிரியங்காவின் ஏக்கத்தை உடைத்துள்ளது. மேலும், இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வின் போது முதியவர்கள் பாடிய வாழ்த்து பாடல்கள் விழாவை மேலும் நெகிழ்ச்சியூட்டியது. விழா ஏற்பாடுகளை தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், உதிரம் நாகராஜ் மற்றும் ஆற்றும் கரங்கள் அருண் ஆபிரஹாம் ஆகியோர் செய்திருந்தனர்.
இதுகுறித்து பேசிய பிரியங்கா, “இன்று என்னை மகளாகவும், சகோதரியாகவும், பேத்தியாகவும் நினைத்து அனைவரும் ஆசீர்வதித்தது என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளனர்” என்று உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் ததும்ப நன்றி கூறினார்.
இந்த வளைகாப்பு நிகழ்வின் மூலம், உலகில் ஆதரவற்றவர்கள் எவரும் இல்லை. அன்பு இருக்கும் வரை மனிதன் ஒருபோதும் அழியாது. மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதை பெரம்பலூர் முதியோர் இல்லத்தினர் நினைவூட்டியுள்ளனர்.

