புற்றுநோயாளிகளை மோசமாக நடத்திய அரசு மருத்துவமனை செவிலியர் - பாய்ந்தது நடவடிக்கை
நோயாளிகளை செவிலியர் மோசமாக திட்டுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால்

Published : January 7, 2026 at 11:39 AM IST
தஞ்சாவூர்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் அலட்சியமாகவும், அவமரியாதையாகவும் நடந்துகொண்ட தஞ்சாவூர் அரசு மருத்துவமனை செவிலியரின் வீடியோ வெளியானதை அடுத்து, அவர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பொதுவாக, புற்றுநோய் சிகிச்சைக்கு வருகிற நோயாளிகளுக்கு நரம்பில் மருந்து ஏற்றுவது (டிரிப்ஸ்) வழக்கம். நோயாளிகளின் படுக்கைக்குச் சென்று, முறையாக ஊசியை செலுத்தி, பேண்டேஜ் போட்டு, மருந்து பாட்டிலை மாட்டிவிட வேண்டும். புற்றுநோய் மட்டுமல்லாமல் வேறு எந்த உடல்நல பிரச்சினைக்கு டிரிப்ஸ் ஏற்ற வேண்டுமென்றாலும், இதுதான் முறை.
ஆனால், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கு படுக்கைக்குச் சென்று டிரிப்ஸ் ஏற்றாமல், நோயாளிகளை ஊசி மற்றும் மருந்துகளுடன் செவிலியர் அறை முன்பு வரிசையாக நிற்க வைத்ததுடன், ஒவ்வொருவராக உள்ளே அழைத்து நாற்காலியில் உட்கார்ந்தவாறே கைக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் டிரிப்ஸ் ஏற்றியுள்ளார் செவிலியர் ரஞ்சிதா.
இப்படி நோயாளிகள் ஒவ்வொருவராக மருந்து பாட்டிலுடன் வந்து, டிரிப்ஸ் போட்டுக்கொண்டு தங்கள் படுக்கைகளுக்குச் சென்று படுத்துக்கொள்ள வேண்டுமாம். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் நோயாளிகளை அந்த செவிலியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், டிரிப்ஸ் போடாமல் இழுத்தடித்துள்ளார். செவிலியர் ரஞ்சிதாவின் இந்த செயல்களை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
| இதையும் படிங்க: சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு - சண்டையிட்டு நகையை மீட்ட துணிச்சல் |
அந்த வீடியோவில், நோயாளியின் கணவர் ஒருவர் படுக்கைக்குச் சென்றுதானே டிரிப்ஸ் போடவேண்டும் என்று கேட்க, “இப்படிலாம் நக்கலாக என்னிடம் பேசக்கூடாது. எனக்கு இந்த ஒரு வேலை மட்டும்தான் இருக்கிறதா? நான் என்ன சும்மாவா இருக்கேன்? நான் என்ன விளையாடிக்கொண்டா இருந்தேன்? உங்களுக்கு டிரிப்ஸ் போடமாட்டேன்” என கடுஞ்சொற்களை பயன்படுத்தி பதிலளிக்கிறார் அந்த செவிலியர்.
செவிலியர் டிரிப்ஸ் போடும் வீடியோவும், அவமரியாதையுடன் பேசும் வீடியோவும் இணையத்தில் பரவி வைரலானதையடுத்து, புற்றுநோய் மருத்துவத் துறையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் செவிலியர் ரஞ்சிதாவை நிரந்தர பணிநீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் இதுபோன்ற ஒருசில செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் செயல்களால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

