ETV Bharat / state

‘என்னிடம் துப்பாக்கி இல்லை, ரத்தத்தில் நேர்மை உள்ளது’: வீரப்பன் மகள் வித்யா

ஒடுக்கப்பட்ட மக்களுடன் கைகோர்த்து செயல்படுவேன் எனவும், அவர்களின் குரலாகவே தன்னை கருதுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் தொகுதி வேட்பாளர் வித்யா வீரப்பன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசும் நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வித்யா வீரப்பன்
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வித்யா வீரப்பன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 12:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சேலம்: தந்தையிடம் இருந்த துப்பாக்கி தன்னிடம் இல்லை என்றும், ஆனால் அவரிடம் இருந்த நேர்மை தன் ரத்தத்தில் கலந்திருப்பதாகவும் வித்யா வீரப்பன் கூறினார்.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருமலைக்கூடலில் உள்ள ஜவஹர் உயர்நிலைப் பள்ளியில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக ஒரே ஒரு ஆசிரியர் 5 பாடங்களை நடத்தி வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன், உடனடியாக அந்தப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியை சந்தித்து மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வித்யா வீரப்பன், “இதுவரை கருமலைக்கூடலில் உள்ள ஜவஹர் உயர் நிலைப் பள்ளியில் ஆண்டுக்கு 200 பேர் படித்து வந்தனர். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் இப்போது 27 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இங்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் பாடம் நடத்தி வருகிறார். அனைத்து பாடங்களையும் ஒரு ஆசிரியரே சொல்லிக் கொடுக்கிறார். இது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மத்தியில் பிரச்சினைகள் நிலவுகிறது.

இதனால், மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதே என் எண்ணம். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வித்யா வீரப்பன்
சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வித்யா வீரப்பன் (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து, ‘தேர்தல் பரப்புரை எப்படி நடைபெறுகிறது? வீரப்பன் மகளாக மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வித்யா, “அப்பாவை பார்த்தது போல் என்னையும் மக்கள் பார்க்கிறார்கள். அவரிடம் இருந்த துப்பாக்கி என்னிடம் இல்லை. ஆனால், அவரிடம் இருந்த நேர்மை என் ரத்தத்தில் இருக்கிறது. அப்படி தான் அவர்கள் என்னை பார்க்கிறார்கள். இந்த மண்ணில் மக்கள் சிந்திய ரத்தம் துடைத்தெறியப்படும். ஒடுக்கப்பட்ட மக்களுடன் கைகோர்த்து செயல்படுவேன். அவர்களின் குரலாகவே என்னை கருதுகிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இரட்டை கொலைக்கு காரணமான போஸ்டர் பிரச்சினை? நாங்குநேரி சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி பின்னணி

மேலும் பேசிய அவர், “கொளத்தூர் காந்தி நகர் பகுதியில் 35 வருடங்களாக வசித்து வரும் அருந்ததியர் சமூக மக்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகின்றனர். தற்போது, அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு சென்று அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு வந்தேன். அவர்களுக்கு பட்டா கிடைக்க மாவட்ட துணை ஆட்சியரிடம் ஏற்கனவே மனு வழங்கப்பட்டுள்ளது. அந்த மனு தற்போது ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று வித்யா வீரப்பன் தெரிவித்தார்.