திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள் - சீமான் விளாசல்
1000 அமித்ஷா-க்கள் வந்தாலும் தமிநாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என சீமான் தெரிவித்தார்.

Published : January 3, 2026 at 4:34 PM IST
திருச்சி: திமுகவும், அதிமுகவும் கூட்டு களவாணிகள். தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை இன்று (டிச.3) சந்தித்து பேசினார். அப்போது, திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரி இல்லை என திருமாவளவன் பேசியது தொடர்பான கேள்விக்கு, “தமிழ் தேசியத்திற்கு திராவிடம் எதிரி எனக் கூறியவரே திருமாவளவன் தான். 2006-ம் ஆண்டுக்கு முன்பு திருமாவளவன் பேசியதை எடுத்துப் பாருங்கள்.
இல்லாத திராவிடம் எப்படி தமிழ் தேசியத்தை எதிர்க்கும் என கற்பித்தவர் திருமாவளவன். அப்போது நான் அந்த மேடையில் கீழே அமர்ந்து பேச்சை கேட்டு கொண்டிருந்தேன். திராவிடம் எங்கே தமிழை காக்கிறது? நீங்களே சொல்லுங்கள். 75,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் எழுத, பேச, படிக்கத் தெரியாத 3 தலைமுறையை உருவாக்கி விட்டு, தமிழ் வளர்கிறது என பேசுவது பைத்தியக்காரத்தனம். பிறகு எப்படி திராவிடம் தமிழ் மொழியை பாதுகாக்கிறது என கூறுகிறீர்கள்?
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கும், திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இந்தி எதிர்ப்புக்கு போராடிய இளைஞர்களை சுட்டுத் தள்ளுங்கள் என கூறியவர் பெரியார். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தியை எதிர்க்கிறோம் என திமுக சொல்வது வெறும் நாடகம். எதிர்க்கட்சியாக இருந்த போது ‘கோ பேக் மோடி’, ஆளும் கட்சியாக இருக்கும் போது ‘வெல்கம் பேக் மோடி’ என்கிறார்கள்” என விமர்சித்தார்.
மேலும் பேசிய சீமான், “போதைப்பொருள் தடுப்பைப் பற்றி பேச தமிழக அரசுக்கு தகுதி இருக்கிறதா? போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை ஓரளவுக்குக் கைகொடுத்துள்ளது என பேசுவதற்கு எதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்? போதைப்பொருள் நாட்டிற்குள் வருகிறது எனக் கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? பள்ளி, கல்லூரி வாசல்களில் போதைப்பொருள் விற்பனை என்பது காவல்துறை அனுமதி இல்லாமல் எப்படி நடக்கும்? ஆனால், மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்றால், மக்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமலே என்ன ஆட்சி நடத்துகிறீர்கள்? இதே போல கடந்த ஆட்சியிலும் மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? என்று கூற வேண்டும்.
கூட்டணியால் ஆட்சி மாறும் ஆனால் ஆட்சி முறை மாறுமா? காங்கிரஸ் - பாஜக, திமுக - அதிமுகவிற்கு இடையே எந்த கோட்பாடு மாற்றமும் கிடையாது. 2 கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி என்கிறீர்கள். திமுகவுக்கு மாற்று எப்படி இன்னொரு திமுகவாக இருக்க முடியும். மாற்று என்பது வெறும் வார்த்தையில் தான், கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது? யார் அதிகம் கொள்ளை அடிப்பது? என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள். இரண்டு பேருமே திருடர்கள் தான். 1000 அமித் ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. நீங்கள் திராவிடர்கள். நாங்கள் தமிழர்கள். தீயசக்திக்கு மாற்று எங்களைப் போன்ற தூய ஆற்றல்கள் தான். ஆகையால் தமிழ்நாட்டில் மாற்று என்பது நாங்கள் தான்” என கூறினார்.

