ETV Bharat / state

‘மணலில் அமர்ந்து இளைஞர்களோடு போராடிவர்’ - நல்லக்கண்ணு அஞ்சலி நிகழ்வில் நினைவுகளை அசைபோட்ட சீமான்

எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான அன்பு செலுத்தி, எல்லோரையும் சமமாக நடத்தும் மனித மாண்பு நல்லக்கண்ணுவிடம் இருந்ததாக சீமான் புகழாரம் சூட்டினார்.

நல்லக்கண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நல்லக்கண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (X/@Seeman4TN)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 4:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: இக்கால இளைஞர்களின் போராட்டங்களுக்கும் சளைக்காமல் சென்று கலந்துகொண்டவர் நல்லக்கண்ணு என சீமான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நல்லக்கண்ணு குறித்த நினைவுகளை செய்தியாளர்களிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “எல்லோரும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று தன் இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புரட்சியாளர். பொது வாழ்க்கையில் அரசியலில் தூய்மை என, அந்த நிலையை வாழ்வின் இறுதி நொடி வரை கடைபிடித்த மகத்தான தலைவர். வெவ்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்கள் கூட, தன் மீது சிறு விமர்சனத்தை வைக்க முடியாத மனித புனிதனாக வாழ்ந்தவர்.

இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு அரசியல் தலைவன் வாழ்ந்தாரா என்று எண்ணி எண்ணி வியக்கும் அளவிற்கு தன் வாழ்க்கையை செதுக்கி செதுக்கி செம்மைப்படுத்திக் கொண்ட மகத்தான மேதை. இந்த தலைமுறை பிள்ளைகள் நாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மிகப்பெரிய போராட்டக்காரர்.

தாமிரபரணி ஆற்றில் மண்ணை அள்ளி அற்றை சிதைக்கிறார்கள் என போராட்டத்தை முன்னெடுத்த போது, மணலில் தானும் அமர்ந்து போராட்டத்திற்கு வலு சேர்த்த மாபெரும் வீரர். எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான அன்பு செலுத்தி, எல்லோரையும் சமமாக நடத்தும் மனித மாண்பு அவரிடம் இருந்தது. நல்லக்கண்ணு என்பது ஒரு பெயர் அல்ல; 100 ஆண்டுகால வரலாறு. அந்த பெயர் வருங்கால தலைமுறைக்கு மிகச்சிறந்த வழித்தடம்.

இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் சமூகம் உள்ளவரை அவர் பெயர் ஓங்கி நிற்கும். எவ்வளவு வேண்டுமானாலும் அவரைப்பற்றி படித்துக் கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட பாடத்தையும், படிப்பினையையும் விட்டு சென்ற வரலாற்று நாயகன் நம் நல்லகண்ணு ஐயா அவர்கள்.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து 30 பேர் எம்எல்ஏக்கள்; வி.பி. துரைசாமி அமைச்சர் - நயினார் நாகேந்திரன் பேச்சால் சலசலப்பு

கடைசி நொடி வரை இந்த மக்கள் நலனுக்காக உழைத்த ஓய்வறியாத உழைப்பாளி. இந்த உன்னத போராளி நம்மோடு இல்லை என்பதை நினைக்கும்போது மிகுந்த மன வலியை கொடுக்கிறது.

நாங்கள் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்த பிள்ளைகள். என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். மிகுந்த துயரம் வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் பெரிதும் நேசிக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் நல்லகண்ணு அய்யாவின் பிள்ளைகள். நாங்கள் பெருமிதத்தோடு செவ்வணக்கம் செலுத்துகிறோம்,” என்று சீமான் கூறினார்.