ETV Bharat / state

'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது அவசியமற்றது - சீமான்

மத ரீதியான காட்சிகள் இருக்கிறது என்றால், அதை நீக்க சொல்லி இருக்க வேண்டும். ஆனால் சான்றிதழ் கொடுக்காமல் இருப்பது சரியில்லை என சீமான் கூறினார்.

சீமான்
சீமான் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 2:53 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது அவசியமற்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சீமான் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். பின்னர், மார்ச் 9- ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.

அப்போது, அதிமுக - பாமக கூட்டணி குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், "அன்புமணிக்கு அதிமுக கூட்டணியில் இணைவது மட்டுமே ஒரே வாய்ப்பு. அதனால் இணைந்துவிட்டார். மற்றபடி, அதிமுகவில் இணைய கூறி அவருக்கு அழுத்தம் ஏதும் வந்ததாக தெரியவில்லை" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், "பிப்ரவரி 21ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம். தைப்பொங்கலாக இல்லாமல், 'தேர்தல் பொங்கலாக' இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்திருக்கிறது. ஆனால், தங்களின் அடிப்படை உரிமைக்காக போராடும் செவிலியர்கள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. தூய்மை பணியாளர்கள் உதரிகளாக இருப்பதால், அவர்களின் குரல் எடுபடவில்லை" எனக் கூறினார்.

பின்னர், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு எழுந்துள்ள சிக்கல் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், "ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது அவசியமற்றது. தெலுங்கு ரீமேக் படம் என்பதால் சான்றிதழ் கொடுக்கக் கூடாது எனக் கூறி, தடை விதிக்கும் அளவிற்கு அதில் சிக்கல் ஏதும் இல்லை. மத ரீதியான காட்சிகள் இருக்கிறது என்றால், அதை நீக்க சொல்லி இருக்க வேண்டும். ஆனால், சான்றிதழ் கொடுக்காமல் இருப்பது அவசியம் இல்லை; சரி கிடையாது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழகத்தில் கஞ்சா புழக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், "அரசுக்கு தெரியாமல் கஞ்சா போன்ற போதை பொருட்கள் தமிழகத்துக்குள் வருவது எப்படி? போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதா? அப்படியென்றால், கையாலாக அரசாக தான் திமுக அரசை பார்க்க வேண்டும்" என்றார்.