வடகிழக்குப் பருவமழைக்கு பம்ப் செட் தயாரா? மழை நீரால் மக்கள் பாதிக்கக்கூடாது - அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்
வெள்ள மீட்பு நடவடிக்கைக்காக தேவையான படகுகளும், இதனை இயக்குவதற்கான நபர்களும் தயார் நிலையில் உள்ளதையும் உறுதி செய்திட வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Published : September 2, 2026 at 9:38 AM IST
சென்னை: பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில், அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் சாய் குமார், தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (01.09.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன் தீப் சிங் பேடி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்ளிட்ட தொடர்புடைய சேவைத் துறைகளின் உயர் அலுவலர்கள், மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கூறும் போது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மின்மோட்டார்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும்
ஒவ்வொரு மண்டலத்திலும் மழைநீர் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான மோட்டார் பம்புகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திட வேண்டும். குறிப்பாக வேளச்சேரி, அம்பத்தூர் சிட்கோ, திருவெற்றியூர் , மணலி உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் உயர் அழுத்த மின்மோட்டார்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர்த் தேக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் குறிப்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைநீர் வடிகால் இணைப்பினை உருவாக்கிட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் சேரும் இடங்களிலும், ஆறுகளின் முகத்துவாரத்திலும் மழை வெள்ளம் நீர் தங்குதடையின்றி செல்கின்ற வகையில் தூர்வாரி அடைப்பினை நீக்கிட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்வழிக்கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தூர்வாரும் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.
மழைநீர் வடிகாலில் தூர்வாருதல், வார்டு வாரியாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளுதல், சாலை சீரமைப்புப் பணிகள், தேவையான மோட்டார் பம்புகள், மோட்டார் பம்புகள் பழுது பார்த்தல், மழைக்கால பணிக்காக தேவையான பணியாளர்கள் நியமித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ள மீட்பு நடவடிக்கைக்காக தேவையான படகுகளும், இதனை இயக்குவதற்கான நபர்களும் தயார் நிலையில் உள்ளதையும் உறுதி செய்திட வேண்டும். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையங்கள் மற்றும் சமையல் கூடங்களை ஆய்வு செய்து, தேவையான வசதிகளை மேற்கொண்டு ஆயத்த நிலையில் வைத்திட வேண்டும்.
தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1671 கீ.மி. நீளத்தில் மழைநீர் வடிகாலில் இருந்து வண்டல்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் (Silt Catch Pit) மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைப்போல புறநகர்ப் பகுதிகளிலும் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். வாகனங்கள், இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
டிமொல்லஸ் சாலை, நூக்கம்பாளையம், எம்.ஆர்.எச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழைக்காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
| இதையும் படிங்க: தூத்துக்குடியில் அமையும் சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் - உள்ளூர் மக்கள் எதிர்ப்பது ஏன்? |
நீர்வளத்துறை சார்பில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மின்சாரத் துறையில் மின் இணைப்புப் பெட்டிகளை தரையில் இருந்து உயர்த்தி வைப்பதோடு, மின்சார கேபிள்கள் வெளியில் தெரியாத வகையிலும், மின்கசிவு இல்லாமலும் தரையின் அடியில் செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின் கசிவு காரணமாக எந்த ஒரு உயிர் இழப்பும் ஏற்படுவதைத் தவிர்த்திட வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், தொடர்புடைய சேவைத் துறைகளின் உயர் அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

