சென்னை யுபிஎஸ்சி தேர்வு மையத்தில் பொருட்கள் வைக்க இடம் இல்லை - பாதுகாப்பாற்ற முறையில் வெளியில் வைத்து சென்ற தேர்வர்கள்
முக அங்கீகார சரிபார்ப்பு ஆப் மூலம் தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும், தேர்வர்களின் தேர்வெழுத வருகைபுரிந்த புகைப்படத்தினையும் ஒப்பிட்டு வருகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

Published : August 30, 2026 at 1:15 PM IST
சென்னை: இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு எழுத வந்த தேர்வர்கள், தங்களின் பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் வெளியில் வைத்துவிட்டு சென்றனர்.
யுபிஎஸ்சி மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்வை 5.49 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியானது.
அதில் 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதிப் பெற்றனர். தொடர்ந்து அவர்களுக்கான முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 21, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 5 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் முதல் நான்கு நாட்கள் தேர்வுகள் வெற்றிக்கரமாக நடத்தப்பட்ட நிலையில், இன்று விருப்பப் பாடத் தாள்களுக்கான தேர்வு காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு புதிய நடைமுறையாக தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தவிர்க்க முக அங்கீகார சரிபார்ப்பு (Face Authentication) மற்றும் பாதுகாப்பு சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், எழும்பூரில் உள்ள சென்னை மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முக அங்கீகார சரிபார்ப்பு ஆப் மூலம் தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும், தேர்வெழுத வருகைபுரிந்த தேர்வர்களின் அடையாள புகைப்படத்தினையும் ஒப்பிட்டு வருகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
| இதையும் படிங்க: தேர்வுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் - உயர்மட்டக் குழு அழைப்பு |
காலை தேர்வுக்கு 8.30 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைக்க தேர்வு மையத்தில் இடம் ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனால் வேறுவழியின்றி, தங்களின் உடமைகளை வெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைத்துவிட்டு அவர்கள் தேர்வெழுத சென்றனர்.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் கூறிய அறிவுரைகளின் படி தேர்வு மையத்திற்குள் எந்தப் பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். தேர்வர்களின் ஹால் டிக்கெட்டிலும் பொருட்கள் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய புதிய அறிவிப்பு (QPReP)தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துகள் இருந்தால், அதைத் தேர்வர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க Question Paper Representation Portal (QPReP) தளம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை திறக்கப்படும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்கப்படமாட்டாது.

