பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் - அமைச்சர் விஸ்வநாதன் பேச்சால் வெடித்த சர்ச்சை
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் அமைந்துள்ள நேருவின் சிலைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மரியாதை செலுத்தினார்.

Published : May 27, 2026 at 3:29 PM IST
மதுரை: பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மதுரை தமுக்கம் சந்திப்பில் அமைந்துள்ள நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, துணைவேந்தர் நியமனம், மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார்.
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் வேந்தராக செயல்படுவது என்பது மாண்புமிகு அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை முடிவு.
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) May 27, 2026
உச்சநீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு, அதனை மீறி, மாநில உரிமைகளை அடகு வைக்கத் துடிக்கும் த.வெ.க கூட்டணி அரசின், காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கடும்… pic.twitter.com/4FBv8ESmCU
குறிப்பாக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. இதில் கொள்கை முடிவை முதலமைச்சர் எடுப்பார். அமைச்சர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி இது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். அவரின் வழிகாட்டுதலின்படி, இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என கூறினார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா பற்றி கேட்ட போது, ”அவர்கள் தங்களுடைய விருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்தார்கள். அவர்கள் மீண்டும் மக்களை தான் சந்திக்க இருக்கிறார்கள். இதனை ஜனநாயக விரோதமாகவும், குதிரை பேரமாகவும் கருத வேண்டாம். மாணிக்கம் தாகூர் கருத்துக்கும், ஜோதிமணி கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. மாணிக்கம் தாகூர் கூறுவது தான் என்னுடைய கருத்து.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சண்டை, மோதல் இருக்கக் கூடாது என்பது தான் விருப்பம். விசிக தலைவர் திருமாவளவன் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். அதை தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்” என்றார்.
| இதையும் படிங்க: பெருந்தெய்வ கோயில்களில் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது அழகர் கோயில் - ஆய்வாளர் காளிராசா |
தொடர்ந்து, ”கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது, மேகதாது விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு என்னவோ அது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
5 ஆண்டுகள் தவெக ஆட்சி நிலைத்து நிற்கும், முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். அவருக்கு துணையாக இரும்பு கரத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்படும்” என தெரிவித்தார்.
திமுக கண்டனம்
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள அரசு பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்ற அமைச்சர் விஸ்வநாதனின் கருத்திற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர் கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் “ஆளுனரே பல்கலைக்கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.
’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக்கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த மசோதாவை நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது“ என தெரிவித்துள்ளார்.
விசிக எம்.பி ரவிக்குமார் கண்டனம்
இதனிடையே, அமைச்சர் விஸ்வநாதனின் கருத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு போராடிப் பெற்றதை கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் சொல்கிறாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் விஸ்வநாதனுக்கு அதிமுக கண்டனம்
அமைச்சர் விஸ்வநாதனுக்கு அதிமுகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் ஐடி பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் வேந்தராக செயல்படுவது என்பது ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கொள்கை முடிவு. உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு, அதனை மீறி, மாநில உரிமைகளை அடகு வைக்கத் துடிக்கும் த.வெ.க கூட்டணி அரசின், காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
திராவிட இயக்க ஆட்சி தமிழ்நாட்டிற்கு என கட்டமைத்த உயர்தனிக் கூறுகளை இன்றைய பொய்க்கால் குதிரை அரசு கூறுபோட்டு சிதைக்க முயல்வது, மாநில உரிமைகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் இந்த கருத்து முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் பேசப்பட்டதா? பல்கலைக்கழக நிர்வாகத்திலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனிலும் அக்கறையின்றி, தங்களின் சுயநல அரசியலுக்காக கொள்கைகளை மாற்றி மாற்றி பேசும் இந்த பொய்க்கால் குதிரை அரசை என்னவென்று விமர்சிப்பது! ஏனென்றால் விமர்சித்தால், ஏன் விமர்சிக்கிறார்கள், எதற்கு விமர்சிக்கிறார்கள் என புரிய வேண்டும் அல்லவா! அதற்கு வாய்ப்பில்லை..." என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான்: உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது: துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை தேவை!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 27, 2026
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை…
உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், "தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்த்ததாக அமைந்து விடும்" என எச்சரித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த ஆட்சியின் போது பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மாநில முதலமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதை அன்றைய ஆளுநர் கிடப்பில் போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்றைய அரசு வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த மசோதா சட்டமானது. அச் சட்டப்போராட்டத்தின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் இது குறித்த முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார். அவரது இக்கருத்து ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு வலுசேர்க்கிறது. எனவே அவர் தனது தவறான கருத்தியல் நிலைபாட்டை கைவிட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். அதில், "தமிழக பல்கலைக் கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சர் பொறுப்பேற்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்று தான் கூறினேன். தற்போதுள்ள நிலை குறித்து நான் எந்த கருத்தும் கூறாதபோது அதற்கு மாறாக சில ஊடகங்களில் திரித்து செய்தி வெளிவந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மறுக்கிறேன்.
மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமாதிரி எந்த கருத்தும் கூறாத போது இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்" என தெரிவித்துள்ளார்.

