மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Published : January 3, 2026 at 10:26 AM IST
மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு பைபர் படகுகளில் சென்ற மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுக்குட்டி. இவர் தனக்கு சொந்தமான IND-TN-16-MO-519 என்ற பதிவு எண் கொண்ட பைபர் படகில் குமார், ரீகன் மற்றும் புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த அன்புராஜ், பழையார் கெளசிகள் ஆகியோருடன் கோடியக்கரையில் இருந்து நேற்று பிற்பகல் மீன் பிடிக்கச் சென்றார்.
இதே போல் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த முபின்தாஸ் என்பவருக்கு சொந்தமான IND-TN-16-MO-2070 என்ற பதிவு எண் கொண்ட பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு, மதன், ராமலிங்கம் மற்றும் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் ஆகிய நான்கு பேரும் கோடியக்கரையிலிருந்து நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்றிரவு 9 மணி அளவில் கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே 30 கடல்மைல் தொலைவில் உள்ள அனலைத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாதகக் கூறி 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்தொழில் செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

| இதையும் படிங்க: கோயிலில் தகாத வார்த்தை பேசுவதா? சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்குங்க - தமிழசை செளந்தரராஜன் |
முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்து உள்ள கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் அனைவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர். அப்போது காரைக்கால் மீனவர்கள் 11 பேரையும் வரும் 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

