பட்ஜெட்டில் மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்கள் இடம்பெறும் - அமைச்சர் வன்னி அரசு
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக முன்னெடுப்புக்கள் நடைபெறுவதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

Published : July 8, 2026 at 7:20 PM IST
சென்னை: வருகின்ற பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சமூக நீதித்துறை சார்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்கள் இடம்பெறும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி, புதிய திட்டங்கள் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற சமூக நீதித்துறையின் ஆய்வுக்கூட்டத்தில், துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள், நிதி ஒதுக்கீடு மற்றும் கள நிலவரங்கள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
சமூக நீதித்துறையின் மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் கூடுதலாக நிதி கோரப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு சமூக நீதித்துறை சார்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்கள் மற்றும் பட்ஜெட் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவர் விடுதிகள் மேம்படுத்தப்படும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் விடுதிகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் எந்தவித குறைபாடும் இல்லாமல் செய்து தர வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
விடுதிகளின் பராமரிப்புக்கான கட்டணங்களைச் சரிசெய்ய தேவையான நிதியை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விடுதிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் அவை உயர்தர உள்கட்டமைப்புடன் கூடிய எலைட் விடுதிகளாக மேம்படுத்தப்பட இருக்கிறது. மேலும், மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முதலமைச்சரின் பரிசீலனையில் இருந்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாட்ஷா தலைமையிலான குழு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெற்று ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்ட நடவடிக்கைகளுடன் மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் ஆணவக் கொலைகள் மற்றும் சாதியத் தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை மூலம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும் பேசிய அவர், "பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளமாக கயிறு உள்ளிட்ட பொருட்கள் அணிவதை தடுப்பது தொடர்பாக, முன்னாள் நீதியரசர் சந்துரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை என்பதற்கு பதிலாக சமூக நீதித்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது துறையின் செயல்பாடுகளை எந்த வகையிலும் மட்டுப்படுத்தாது. இது தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

