ETV Bharat / state

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் அட்டை எப்போது? அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்

ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்து தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

நியாய விலைக்கடையில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு
நியாய விலைக்கடையில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2026 at 2:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: புதிய குடும்ப அட்டைக் கோரியவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் உலகப் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று (மே 30) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் பேரணியைத் தொடங்கி வைத்தார். அத்துடன், பேரணியில் கலந்து கொண்டவர்கள் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், "போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுடன் பயணிக்கும் ஆட்சியாக தவெக அரசு உள்ளது. நியாய விலைக் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் கோரிக்கைகளையும் மனுவாகப் பெற்றுள்ளோம். எங்கெல்லாம் நியாயவிலைக் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறதோ, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று ஊழியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

புதிதாக குடும்ப அட்டைக் கோரியவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் குடும்ப அட்டைகளைக் கொடுப்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறோம். முதியவர்களுக்கு வீடு தேடி சென்று ரேசன் பொருட்களை அளிக்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து எவ்வித புகார்களும் பெறப்படவில்லை. புகார்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களோடு மக்களாகவே உள்ளோம். எங்களை சந்திப்பது எளிமையானதே.

விவசாயிகளிடம் இருந்து தேங்காய், ராகி உள்ளிட்டப் பொருட்களைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன. முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ரேசன் பொருட்கள் பதுக்கல் இருந்தால் அது குறித்து தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு உபயோக தண்ணீர் கேன்களின் தூய்மையின்மை, முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கண்ணியமானதாக டாஸ்மாக்கை செயல்படுத்துவோம்' - அமைச்சர் விக்னேஷ் பேச்சு

இதனிடையே, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட அத்யாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அமைச்சர்கள் வெங்கடரமணன், மரியவில்சன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை உரிய தரம், எடையுடன் வழங்க வேண்டும் என்றும், உப்பு, சோப்பு உள்ளிட்ட இதரப் பொருட்களை வாங்க மக்களை நிர்பந்திக்கக் கூடாது என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நியாயவிலைக் கடைக்கு உள்ளேயும், அதன் சுற்றுப்பகுதிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.